தூத்துக்குடி:பூச்சிக்கொல்லி மருந்து பரிசோதனை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் இரசாயனங்கள் கண்மாயில் கலப்பதால் விவசாயிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும் இரசாயனங்கள் கண்மாயில் கலப்பதை நிறுத்த போர்க்கால அடிப்படையில் மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பூச்சிக்கொல்லி மருந்து பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே 15 மாவட்டங்களில் மட்டுமே இப்பூச்சி கொல்லி மருந்து பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது.
தென் மாவட்டங்களில் மதுரை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, வேலாயுதபுரம் பரிசோதனை நிலையம் உட்பட 3 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் இப்பரிசோதனை நிலையத்திற்கு, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பரிசோதனை ஆராய்ச்சிக்காகக் கொண்டு வருகின்றனர்.
இங்கு ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் இரசாயனங்களை நேரடியாக நீரோடை வழியாக அருகில் உள்ள நெடுங்குளம் கண்மாயில் கலக்க விடுவதால் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் வளர்ப்போர் பெரும் அச்சத்தில் உறைந்து உள்ளனர். வேலாயுதபுரம் நெடுங்குளம் கண்மாயில் தேக்கி வைக்கும் நீரைக் கொண்டு ஆவல் நத்தம், இலுப்பையூரணி, மூப்பன்பட்டி, தோட்டிலோவன்பட்டி, கஞ்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களுக்குப் பாசனத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.