தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஆவடியில் தயாரான சுரிநாம் நாட்டின் ராணுவ உடைகள்! - ARMY DRESS MANUFACTURING

சென்னையை அடுத்த ஆவடியில் மத்திய அரசின் படைத்தள உடை தயாரிப்பு தொழிற்சாலையில் முதன்முறையாக சுரிநாம் நாட்டிற்கு ராணுவ உடைகள் தயாரிக்கப்பட்டு, நேற்று (ஜன.28) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுரிநாம் நாட்டின் ராணுவ உடைகள்
சுரிநாம் நாட்டின் ராணுவ உடைகள் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2025, 10:24 AM IST

திருவள்ளூர்:சென்னையை அடுத்த ஆவடியில் செயல்படும் மத்திய அரசின் படைத்தள உடை உற்பத்தித் தொழிற்சாலையில் ராணுவ உடைகள், உயிர் காக்கும் கவசங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இங்கு தயாரிக்கப்படும் உடைகளும், உபகரணங்களும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

இந்நிலையில், முதன்முறையாக ஆவடியில் உற்பத்தி செய்யப்படும் ராணுவ உடைகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, தென் அமெரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள சுரிநாம் என்ற நாட்டிற்கு இந்த ராணுவ உடைகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஏற்றுமதிக்காக உடைகளை ஏற்றிக் கொண்டு சென்ற கனரக வாகனத்தை நேற்று (ஜன.28) ஆவடி படைத்தள பொது மேலாளர் ரெட்டி கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.

ஆவடி படைத்தள பொது மேலாளர் ரெட்டி பேட்டி (ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து, இந்த ராணுவ ஆடை தயாரிப்பு குறித்து ஆவடி படைத்தள பொது மேலாளர் ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “இந்த உடைகள் தென் அமெரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள சுரிநாம் என்ற நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. முதல்கட்டமாக 4 ஆயிரத்து 500 ராணுவ உடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

அதன் மதிப்பு ரூபாய் 1 கோடியே 71 லட்சம் எனத் தெரிவித்த அவர், இந்தியாவில் இருந்து முதல்முறையாக வெளிநாட்டிற்கு ராணுவ உடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆவடியில் உள்ள படைத்துறை உடை தொழிற்சாலை (OCF) என்பது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ட்ரூப்ஸ் கம்ஃபோர்ட் லிமிடெட் எனப்படும் பொதுத்துறை நிறுவனத்தின் ஒரு பிரிவாகும். இது ஒரு முன்னணி அதிநவீன பாதுகாப்பு ஆடை மற்றும் கவசப் பிரிவாகும்.

இதையும் படிங்க:ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா? தலைமை தேர்தல் அதிகாரியிடம் நாதக புகார்!

1961-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படைத்துறை உடை தொழிற்சாலையில் பல கோடி பாதுகாப்பு சீருடைகள், கூடாரங்கள், பாராசூட்டுகள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் மற்றும் ஹெல்மெட்களை பாதுகாப்பு, துணை ராணுவம் மற்றும் பல்வேறு மாநில போலீஸ் படைகளுக்கு வழங்கியுள்ளது.

பல ஆண்டுகளாக படைத்துறை உடை தொழிற்சாலையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள், தமிழ்நாடு காவல்துறைக்கு கவச வாகன பாதுகாப்பு, புல்லட் ரெசிஸ்டண்ட் ஜாக்கெட் மற்றும் புல்லட் ரெசிஸ்டண்ட் உடைகள் போன்ற கவச தயாரிப்புகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன.

இது புதுச்சேரி காவல்துறைக்கு வெடிகுண்டு உடைகள் மற்றும் கவச வாகன பாதுகாப்பு மற்றும் பாலிஸ்டிக் ஹெல்மெட்களை உத்தரகண்ட் காவல்துறை மற்றும் ஹைதராபாத் டிஆர்டிஓ, ஆகியவற்றிற்கு அனுப்பியுள்ளது” என்றார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மேலாளர்கள் குகன், ராஜ் கிஷோர், செந்தில்குமார் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஜெய் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details