திருவள்ளூர்: பொன்னேரி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ரவிக்குமார் (63). மணலிபுதுநகர் நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இவர், திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். மேலும் கடந்த 1991 - 1996இல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில், அதிமுகவின் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.
அதனிடையே ரவிகுமார், திண்டுக்கல் தொகுதியில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினரான நிர்மலாவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், சென்னையில் மருத்துவம் பயின்று வரும் அவரது மகள் ரவீனா, வார விடுமுறைக்காக ஊருக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து விடுமுறை முடிந்த நிலையில், சென்னையில் உள்ள மகளின் கல்லூரிக்கு, ரவிக்குமார் தமது காரில் மனைவி நிர்மலாவுடன் சென்று மகளை விட்டு விட்டுத் திரும்பி வந்துள்ளார்.
அப்போது, மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்டச் சாலை, சீமாவரம் பகுதியில் முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்னால் கார் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது. அதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு, பின்னர் இருவரையும் மீஞ்சூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்று பரிசோதனை செய்துள்ளனர்.