சேலம்: சேலத்தில் இரு தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதல்கள் குறித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தீவட்டிபட்டியில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சாதியவாத சமூகவிரோதிகள் ஆதிதிராவிட மக்களின் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.
காவல்துறையினரும் வழக்கம் போல பாதிக்கப்பட்ட எளிய ஆதிதிராவிட மக்கள் மீதே தாக்குதல் நடத்தி தமது அதிகார மேலாதிக்க ஆணவப்போக்கை வெளிப்படுத்தியுள்ளனர். சாதிவெறியர்களின் கல் வீச்சிலும் காவல்துறையினரின் தடியடித் தாக்குதலிலும், படுகாயமடைந்த ஆதிதிராவிடர்கள் பலரைப் பொய்வழக்கில் கைதுசெய்து சிறைப்படுத்தியுள்ளனர்.
கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் மாரியம்மன் திருவிழாவில் ஆதிதிராவிடர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பாரும் பங்கேற்பது வழக்கமான ஒன்றே ஆகும். ஆனால், இந்த ஆண்டு திருவிழாவில் ஆதிதிராவிடர்கள் பங்கேற்க கூடாது என பாமக தரப்பைச் சார்ந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் கடந்த மே.2ஆம் தேதி அன்று இருதரப்பினரையும் அழைத்து அமைதிக்கான பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், சுமூகமான தீர்வு எட்டவில்லை. எனவே, தேரோட்டம் - திருவிழா நடத்தக்கூடாது என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்த இளைஞன் ஒருவனைச் சாதிவெறியர்கள் தாக்கியுள்ளனர். மண்டையில் பலத்தக் காயத்துடன் தப்பியுள்ளான். அவனுடன் இருந்த பிற இளைஞர்கள் மீதும் சரளைக் கற்களை வீசி தாக்கியுள்ளனர். அத்துடன் அப்பகுதியிலுள்ள கடைகளில் தீ வைத்துள்ளனர்.