சென்னை: வண்டலூரை அடுத்த வெங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சிவகுமார் (38). இவரது மனைவி தேவி (35). இவர்களுக்கு நான்கு வயதில் குழந்தை ஒன்று உள்ளது. சிவகுமார் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று பணி முடித்து விட்டு வந்த சிவகுமார் குடும்பத்துடன் வீட்டில் இருக்கும் மொட்டை மாடியில் உள்ள படுக்கை அறையில் தூங்கச் சென்று உள்ளனர்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கதவை உடைக்கும் சத்தம் கேட்டு கணவன் மனைவி இருவரும் படுக்கை அறையில் இருந்து கீழே இறங்கி வந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கீழே உள்ள படுக்கை அறையில் மர்ம நபர் ஒருவர் பீரோவை உடைத்து நகைகளை கொள்ளை அடித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது கணவன் மனைவி இருவரும் கூச்சலிட்டனர் உடனே அந்த மர்ம நபர் கையில் வைத்திருந்த பயங்கர ஆயுதத்தை கொண்டு இருவரையும் தாக்க முற்பட்டுள்ளார். பயந்து போன இருவரும் உயிருக்கு பயந்து ஓடினர். அதன் பின்னர் அந்த மர்ம நபர் தேவியின் அருகே சென்று உங்களை கொலை செய்து விடுவேன் என மிரட்டி தேவி கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரம் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தாலி சங்கிலி உட்பட வீட்டில் இருந்த 15 சவரன் தங்க நகை, 45 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், 2 கிலோ வெள்ளி அனைத்தையும் எடுத்துக்கொண்டு நடந்தவையை போலீசாரிடம் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து எந்த ஒரு பதட்டமும் இன்றி சென்று உள்ளார்.
அது மட்டும் இன்றி அதே பகுதியில் மற்றொரு வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்ல முயற்சித்த போது சுமார் ஒரு மணி நேரமாக போராடி கதவை உடைக்க முடியாததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது பர்ஸ் மட்டும் இருந்துள்ளது. அதை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.