சென்னை:பரந்தூரில் விமானம் நிலையம் அமைப்பதற்காக ஆய்வு செய்த இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கு தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் பகுதியில் இரண்டாவது சென்னை விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதியை சுற்றியுள்ள மக்கள் 910 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தவெக தலைவர் விஜய் பரந்தூருக்கு சென்றார். விஜய் கிராமத்துக்குள் செல்ல தடை விதித்த போலீசார் அவரை மண்டபத்தின் முன்பு வேனில் இருந்து பேசுவதற்கு அனுமதித்தனர்.
கவனத்தை ஈர்த்த ராகுல் வீடியோ:பரந்தூர் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள மக்களிடம் பேசிய தவெக தலைவர் விஜய், "பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 910 நாட்களுக்கு மேலாக, நீங்கள் உங்கள் மண்ணுக்காக போராடி வருகிறீர்கள். உங்கள் போராட்டம் குறித்து ராகுல் என்ற சிறுவன் பேசியதை கேட்டேன். அது என் மனதை ஏதோ செய்துவிட்டது. உடனே உங்களை பார்த்து, பேசியே ஆக வேண்டும் என தோன்றியது. உங்களுடன் நிற்பேன் என சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அதனால்தான் இங்கே வந்திருக்கின்றேன்.
ஒரு வீட்டுக்கு முக்கியமானவர்கள் அந்த வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான். நாட்டுக்கு முக்கியமானவர்கள் விவசாயிகள்தான். அதனால்தான் உங்களைப் போன்ற விவசாயிகள் காலடி மண்ணை தொட்டு கும்பிட்டு விட்டு என்னுடைய அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும் என முடிவோடு இருந்தேன். அதற்கு சரியான இடம் இது என தோன்றியது.
என்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாக, என்னுடைய கள அரசியல் பயணம் உங்களுடைய ஆசிர்வாதத்துடன் இங்கே இருந்து தொடங்குகிறது. விக்கிரவாண்டியில் எனது கட்சியின் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகளைப் பற்றிக் கூறினேன். இயற்கை வள பாதுகாப்பு. சூழலியல், காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ளக் கூடிய இயற்கைக்கு ஊறு விளைவிக்காத பகுதி சார் மாநில வளர்ச்சி பரவலாக்கம் என்ற கொள்கையை அறிவித்தேன். விவசாயிகள் நிலங்கள் கொள்கை பாதுகாப்பு தீர்மானம் என இரண்டாவது கொள்கையை அறிவித்தேன். இதையெல்லாம் ஓட்டு வாங்குவதற்காக சொல்லவில்லை.
சென்னையை வெள்ளக்காடாக்கும்:பரந்தூரில் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள், 13 நீர் நிலைகளை அழித்து சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக்கும் இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகின்றேன். இந்த விஷயத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டப் போராட்டம் நடத்த தயங்க மாட்டேன். இந்த முயற்சியில் உங்களுடன் உறுதியாக நிற்பேன். விமானநிலையம் வரக்கூடாது என சொல்ல வரவில்லை என்று ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். .
விமான நிலையம் வேண்டாம் என்றால் வளர்ச்சிக்கு எதிரானவன் என்று கதை கட்டி விடுவார்கள். அறிவியல் ஆய்வில் உலக வெப்பமயமாதல் குறித்து கூறப்பட்டுள்ளது. அதன் விளைவாக சென்னை நகரம் ஒவ்வொரு ஆண்டும் தவித்து வருகிறது. சென்னை வெள்ளத்துக்கு காரணம் சென்னையை சுற்றி உள்ள சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் அழிக்கப்பட்டதுதான் காரணம் என்று ஆய்வு கூறுகிறது. 90 சதவிகித விளைநிலங்களை அழித்து கொண்டு விமான நிலையம் கொண்டு வரப்படும் என்று கூறும் எந்த அரசாக இருந்தாலும் அது மக்கள் விரோத அரசுதான்.