தேனி:தேனி மாவட்டம்போடிநாயக்கனூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவரை நிலம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் காரில் கடத்தப்பட்ட தகவலறிந்து போடிநாயக்கனூர் நகர் காவல் துறையினர் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக கடத்தல் கும்பலை மடக்கிப்பிடித்து வழக்குரைஞரை மீட்டுள்ளனர்.
இத்தகைய சூழலில், நேற்று (நவ.20) அதிகாலை ஓசூரில் வழக்குரைஞர் ஒருவர் வெட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது போடிநாயக்கனூரில் வழக்குரைஞர் ஒருவர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறுகையில், "தேனியைச் சேர்ந்த சந்தன பாண்டி என்பவருக்கும், வழக்குரைஞர் சுரேஷ் என்பவருக்கும் நிலம் விற்பது சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:ஓசூர் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் பகீர் திருப்பம்... ஆனந்தின் மனைவியும் கைது..!
இந்த நிலையில், இன்று (நவ.21) காலை 8 மணி அளவில் போடிநாயக்கனூர், சுப்புராஜ் நகரில் உள்ள சிட்னி மைதானம் அருகாமையில் நடைப் பயிற்சி மேற்கொண்ட வழக்குரைஞர் சுரேஷை நான்கு நபர்கள் காரில் ஏற்றிக்கொண்டு கடத்திச் சென்றதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, கடத்திச் சென்ற வாகன எண் TN 57 AJ 9495 என்பதை தெரிந்து கொண்ட போடிநாயக்கனூர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் கேத்ரின் மேரி துணிச்சலாக, காவல் துறை வாகன ஓட்டுநர் சரவணன் உடன் சென்று தேனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் சம்மந்தப்பட்ட வாகனத்தை வழிமறித்து வழக்குரைஞர் சுரேஷை மீட்டு அந்த காரில் இருந்த நான்கு நபர்களை கைது செய்தார்.
இதுமட்டும் அல்லாது, போடியை சேர்ந்த அட்டாக் பாண்டி மற்றும் தேனியைச் சேர்ந்த செல்வேந்திரன், சிவனேசன், சண்முகம் இந்த நான்கு நபர்கள் தான் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்த நிலையில், அவர்களையும் கைது செய்த காவல்துறையினர் தற்போது போடிநாயக்கனூர் நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்