சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கத்தினர் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இருந்தபோதும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனைக் கண்டித்து ஜாக்டோ - ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் அமைச்சர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்ககளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது அரசு அலுவலர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் என்னென்ன என்பது குறித்தும், அதை நிறைவேற்றுவதற்கான வழிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நாளை தினம் ஜாக்டோ - ஜியோ போராட்டம் அறிவித்துள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்திற்க்கு பிறகு ஜாக்டோ-ஜியோ சங்கத்தின் ஒருங்கினைப்பாளர் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் எங்களின் 0 அம்ச கோரிக்கைகளை முழுமையாக கேட்டறிந்தனர். எங்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் எடுத்துக் கூறி மாலைக்குள் பதில் அளிப்பதாக அமைச்சர்கள் கூறினார்கள்" என தெரிவித்தார்
மேலும், அமைச்சர்களுடைய முடிவுக்கு ஏற்ற வகையில் தான் தங்களின் போராட்டம் முடிவு இருக்கும் எனவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண் விடுப்புகளை வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய முரன்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். ஓருங்கிணைந்த ஓய்வூதியம் திட்டம் வேண்டாம் என்று தெளிவாக கூறிவிட்டதாகவும் அவர் கூறினார்.