கோயம்புத்தூர்:ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டம் அமராவதி வனச்சரகம் மஞ்சம்பட்டி வனப்பகுதியில் வனத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் வயிற்றில் காயம்பட்ட நிலையில் புலி சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமராவதி வனச்சரகர் சுரேஷ் தலைமையில் 50 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு புலியை தேடிவந்தனர். மேலும் இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில், திருப்பூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனா தலைமையில் அந்த பகுதியில் 20க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கோமிராக்கள் பொருத்தப்பட்டு புலி நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. மேலும் காயம்பட்ட புலியை பிடித்து சிகிச்சை அளிக்கும் வகையை 3க்கும் மேற்பட்ட கூண்டுகள் வைக்கப்பட்டது.
தொடர்ந்து 20 நாட்கள் கண்காணிப்புக்கு பிறகு 15ம் தேதி காயம்பட்ட புலி கூண்டில் சிக்கியது. இதனை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்ப வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் புலியை சோதனை செய்ததில் காயம்பட்ட புலி ஆண் புலி என்பதும் 8 முதல் 9 வயது இருக்கும் என்பது கண்டறியப்பட்டது.
கூண்டில் இருந்த புலிக்கு மயக்க மருந்து செலுத்தி கூண்டில் வைத்தே அதன் பின் வயிற்றுப் பகுதியில் இறுக்கி இருந்த கயிற்றை அகற்றி காயத்திற்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து காயத்திற்கு மருந்துகள் வைக்கப்பட்டு பல மணி நேர கண்காணிப்பிற்கு பிறகு புலி அதே வனப்பகுதியில் விடப்பட்டது.