சென்னை:சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 23ந் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து சம்பவம் குறித்து விசாரணை செய்வதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் மம்தா குமாரி, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சிக் உள்ளிட்ட இரண்டு பேர் கொண்ட உண்மை கண்டறி குழு கடந்த 29ந் தேதி இரவு சென்னை வந்தனர்.
அவர்கள் அண்ணா பல்கலை கழகத்தில் இன்று (டிச.30) காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை, சுமார் 7 மணி நேரம் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். இதில், அண்ணா பல்கலைக் கழக பதிவாளர், பேராசிரியர்கள், விடுதி நிர்வாகிகள், விடுதி காப்பாளர்கள், காவலாளிகள் உட்பட பலருடன் குழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுக்கப்பட்ட இடத்தையும் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் மாலை 4 மணி அளவில் அண்ணா பல்கலைக் கழகத்தில் சம்பவம் குறித்தான முதல் நாள் விசாரணை நிறைவடைந்தது.
அறிக்கையாக தகவல் வெளியிடப்படும்
இந்த நிலையில் விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி, '' அண்ணா பல்கலைக் கழகத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணை முழுமையாக முடித்த பிறகு எங்களது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பிப்போம். அதன் பின்னர் அறிக்கையாக தகவல் வெளியிடப்படும்'' என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து முதல் நாள் விசாரணை தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என். ரவியிடம் 1 மணி நேரத்திற்கும் மேலாக தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.
நாளையும் விசாரணை தொடரும்
ஆளுநர் உடனான ஆலோசனை குறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி கூறும்போது, '' இதுவரை நடந்த முதற்கட்ட விசாரணையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் முக்கிய துறைகளில் சென்று விசாரணை நடத்தி உள்ளோம். அண்ணா பல்கலைக் கழக சம்பவத்தில் விசாரணை முடியவில்லை. இன்னும் சிலவற்றை விசாரிக்க வேண்டியது உள்ளது. முதல் நாள் விசாரணையை மையமாக வைத்து ஆளுநர் ரவியை நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தினோம். நாளையும் விசாரணை தொடரும். நாளை விசாரணை நிறைவு பெற்ற பின் மத்திய அரசிடம் இறுதி கட்ட விசாரணை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்படும்'' என தெரிவித்தார்.