விழுப்புரம்: விக்கிரவாண்டி பழைய காவல் நிலைய தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (34). இவர் திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் இசேவை மைய ஆபரேட்டராக உள்ளார். இவரது மனைவி சிவசங்கரி. இவர்களுடைய மகள் மூன்றரை வயது நிரம்பிய லியா லட்சுமி விக்கிரவாண்டியில் உள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்கேஜி வகுப்பில் படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி இயற்கை உபாதையை கழிக்க பள்ளி கழிவறைக்குச் சென்றிருந்தபோது கழிவறைத் தொட்டி மூடி உடைந்து உள்ளே விழுந்து இறந்தார்.
கழிவறை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையானது அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
மரணத்தில் சந்தேகம்
இதனால் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் குழந்தை இயற்கையாக இறக்கவில்லை என்றும் தங்கள் குழந்தை மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க:சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..!
புகாரின் அடிப்படையில், அஜாக்கிரதையாக செயல்பட்டதாக விக்கிரவாண்டி போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குபதிந்து பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக் மேரி, ஆசிரியை ஏஞ்சல் ஆகியோரை நள்ளிரவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவருக்கும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் தாளாளர் மற்றும் முதல்வர் ஆகிய இருவருக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஆசிரியை ஏஞ்சல் விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியநாராயணன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
தாளாளர் மற்றும் முதல்வரிடம் மருத்துவமனையில் விசாரணை மேற்கண்ட நீதிபதி அவர்களுக்கும் வருகிற 10-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் இவர்கள் மூவரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனை இன்று (ஜன. 8) விசாரித்த விழுப்புரம் முதன்மை நீதிமன்றம் அமர்வு நீதிபதி மணிமொழி, மாலையில் தீர்ப்பு வழங்குவதாகக் கூறியிருந்தார். அதன்படி மாலையில் மூவரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.