தஞ்சாவூர்:தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பாத்திமா நகர் பகுதியில் சீனிவாசன் (29) மற்றும் அவரது சகோதரர் சிவாஜி கணேசன் (25) ஜூஸ் கடை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் பள்ளிகள் உள்ளதால் பெரும்பாலும் மாணவர்கள் வருகை தருவது அதிகமாக உள்ளது.
இதனால் மாணவர்களை கவரும் வகையில் ஜூஸ் கடையில் தள்ளுபடி வைப்பது வழக்கம். இந்நிலையில் மாணவர்கள் மத்தியில் தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், திருக்குறள் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக திருக்குறள் கூறினால் ஜூஸ் வழங்கப்படுகிறது.இதில் 5 திருக்குறள் மனப்பாடமாக ஒப்பித்தால் அவர்களுக்கு சர்பத் இலவசமாகவும், 10 குறள் ஒப்புவித்தால் பால் சர்பத்தும், 20 குறள் ஒப்பித்தால் மில்க் ஷேக் வழங்கியும் வருகிறார்கள்.
இது குறித்து பேசிய ஜூஸ் கடை உரிமையாளர் சீனிவாசன் கூறூகையில், "மாணவர்கள் பள்ளியை முடித்துவிட்டு நேரடியாக வீட்டுக்குச் சென்று செல்போன் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த எண்ணத்தை மாற்றும் வகையில் தினமும் 5 திருக்குறள், 10 திருக்குறள் மனப்பாடம் செய்து வந்து கூறினால் சர்பத் கிடைக்கும் என்பதால் மாணவர்கள் நாள்தோறும் புதுப்புது திருக்குறள்களை படித்து கடையில் திருக்குறள் ஒப்பித்து ஜூஸ் குடித்து செல்கின்றனர். இது எங்களுக்கு மன திருப்தியை தருகிறது.