சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு கடந்த 18ஆம் தேதி காலையில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் அது வெரும் புரளி என்று தெரிந்தது. ஆனாலும் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தின் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் வழக்குகள் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறில் இருந்து இந்த மிரட்டல் இமெயில் வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, சைபர் கிரைம் தனிப்படையினர் தஞ்சை திருவையாறு சென்று விசாரித்தபோது அப்பகுதியை சேர்ந்த பிரசன்னா (27) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் வினோதமான உண்மைகள் தெரிய வந்தன. அதாவது, பிரசன்னா சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்ததாகவும் அப்போது எதிர் வீட்டுக்காரர் ஒருவரிடம் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அவரை பழி வாங்குவதற்காக அவருடைய பெயரில் போலியான ஈமெயில் ஐடி உருவாக்கி அதன் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஒப்புக்கொண்டார்.