தஞ்சாவூர்:வளர்ந்து வரும் மாநகரான கும்பகோணத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல், குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில், சட்டம் ஒழுங்கை தொடர்ந்து நல்ல நிலையில் பராமரிக்கவும், குற்றச்சம்பவங்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்திடவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கும்பகோணத்தில் உள்ள முக்கிய நகர் பகுதிகளை 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு செய்திட ஏதுவாக 'டெல்டா காப் -பைக் பேட்ரோல்' என்ற புதியதொரு முயற்சியை மேற்கொண்டுள்ளனர் தஞ்சாவூர் போலீசார். இதற்காக பிரத்யேகமாக ஐந்து இருசக்கர வாகனங்களை ஒதுக்கி இரு பெண் போலீசார் உட்பட மொத்தம் 10 போலீசார் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பிரத்யோக உடை, சைரன், கேமரா, வாக்கி டாக்கி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
இந்த 5 வாகனங்களுக்கு கும்பகோணம் காந்தி பூங்காவை மையமாகக் கொண்டு தனித்தனி பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. வாகனம் 06க்கு ஏஆர்ஆர் ஆர்ச் பகுதியை மையமாக கொண்டும், வாகனம் 07சிஆர்சி ரவுண்டானா பகுதியை மையமாகக் கொண்டும்,
வாகனம் 08 அரசு மருத்துவமனை பகுதியை மையமாக கொண்டும் செயல்படவுள்ளது. மேலும் வாகனம் 09 மேலக்காவேரி பகுதியை மையமாக கொண்டும், வாகனம் 10 மகளிர் வாகனம் மாநகரின் செட்டிமண்டபம் முதல் தாராசுரம் வரை மற்றும் பெரிய கடைவீதியை மையப்படுத்தி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.