கும்பகோணம்: தமிழ் கடவுள் எனப் போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாகக் கருதப்படுவது கும்பகோணம் அடுத்த சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில். இது பிரபவ முதல், அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருடத் தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டுமலைக் கோயிலாகும்.
தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றதது இந்த தலம். எனவே இத்தலத்தில் முருகப்பெருமான், "சிவகுருநாதன்" என்றும் சுவாமிக்கே நாதன் ஆனதால் "சுவாமிநாதன்" என்றும் போற்றப்படுகிறார். நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் இத்தலம் பாடப்பெற்றது.
மேலும், அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் பாத தரிசனம் அருளிய இடம் என்றும், இந்திரனுக்குச் சாபவிமோசனம் கிடைத்ததால், ஐராவத யானையினை இத்தலத்தில் காணிக்கையாகச் செலுத்திய பெருமையும் இக்கோயில் கொண்டுள்ளது. இதன் காரணமாக இங்கு முருகப்பெருமானுக்கு மூலவர் சன்னதி கிழக்கு நோக்கி யானை வாகனம் அமைந்துள்ளது.
மகாமுனி அகத்தியர், முருகப்பெருமானைப் பூஜை செய்து வழிபட்ட தலம் என்ற பெருமையும் இத்தலத்திற்கு உண்டு. இத்தகைய சிறப்புப் பெற்ற ஸ்தலத்தில், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழா 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அந்த இந்த ஆண்டிற்கான விழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிது.