தென்காசி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி 40 தொகுதிகளிலும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் தென்காசி மாவட்டம் புளியங்குடி, அய்யாபுரம் பாம்புக் கோவில்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் அவர் பேசுகையில், மீண்டும் மோடி வேண்டும். மோடி பிரதமர் ஆவது உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால் எதிர்க்கட்சியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று இதுவரை அறிவிக்கவில்லை. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரா? அவரது மகன் பிரதமர் வேட்பாளரா? என கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து, 57 லட்சம் காங்கிரீட் வீடுகளை பொது மக்களுக்குக் கட்டிக் கொடுத்தது மோடி அரசு. ரேஷன் கடையில் 20 கிலோ அரிசி வழங்கியது மோடி அரசு. விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் வழங்கியது மோடி அரசு. நீண்ட நாள் கோரிக்கையான ஏழு உட்பிரிவுகளைக் கொண்ட தேவேந்திர குல வேளாளர் என அரசாணை கொண்டு வந்தது பாரத பிரதமர் நரேந்திர மோடி தான். பட்டியல் இனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றால் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும்.