நெல்லை: திருக்குறுங்குடி, வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் மகாராஜன். இவரது மனைவி மரகதம் என்ற மஞ்சு (33). இவர் திருக்குறுங்குடியில் உள்ள 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றாக திகழும் அழகிய நம்பிராயர் கோயில் ஜீயர் மடத்தின் கணக்காளராக வேலை பார்த்து வந்தார்.
இரண்டு தினங்களுக்கு முன் அவர் வழக்கம் போல திருக்குறுங்குடி கோயிலில் உள்ள மடத்தின் அலுவலகத்திற்கு வேலைக்கு வந்துள்ளார். அப்போது மடத்தின் பொறுப்பாளர் அவரை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து மரகதம் என்ற மஞ்சு வரவு, செலவு கணக்குகளை ஒப்படைத்து விட்டு சென்று விடுகிறேன் என்று கூறினாராம்.
இதனிடையே கோயில் நிர்வாக தலைவரான நம்பிதலைவன் பட்டயம் என்ற ஊரை சேர்ந்த ராஜேந்திர பாண்டியன், அவரது மகன் செல்வ சுரேஷ், அதே ஊரைச் சேர்ந்த சீனி பாண்டியன் மகன் ஜெயப்பிரகாஷ் மற்றும் 2 பேர் என 5 பேர் சேர்ந்து, மஞ்சுவை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
மேலும் சேலையை பிடித்து இழுத்து, இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த மஞ்சுவை அங்கிருந்தவர்கள் மீட்டு, நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் நெல்லை அரசு மருத்துவவ கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். கோயிலுக்குள் உள்ள மடத்தின் அலுவலகத்தில் பெண் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.