சென்னை:சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்வின் ஐந்து பேர் வெப்ப அலை தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வில் ஏற்பட்ட உயிரிழப்பைக் குறித்தும் காலநிலை மாற்றத்தின் முக்கியத்துவம் குறித்தும் பூவுலகின் நண்பர்கள் ஈடிவி பாரத் தமிழுக்கு பேட்டியளித்தனர்.
இது குறித்து பூவுலகின் நண்பர்கள் பிரபாகரன் கூறுகையில், "மெரினா கடற்கரையை சாகசத்திற்கு தேர்வு செய்தது மிகவும் தவறானது. இந்த 10 லட்சம் பேர் கூடியுள்ள நிகழ்ச்சிக்கு முன்னேற்பாடுகள் சரியாக செய்யவில்லை. தண்ணீர் வைக்கவில்லை, கூடாரங்கள் அமைக்கவில்லை, மருத்துவ வசதிகள் இல்லை என்று அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கூறிவருகின்றனர்.
பூவுலகின் நண்பர்கள் பிரபாகரன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) குறிப்பாக இந்த சாகசத்திற்கு ஒதுக்கிய நேரம் காலை 11 மணியிலிருந்து மதியம் 2 மணி ஆனது மிக மிக தவறானதாகும். இந்த நேரத்தில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். நேற்று சென்னையினுடைய வெப்பநிலையானது 34.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அதேபோல ஈரப்பதம் 73 சதவீதத்திற்கு மேலே இருந்துள்ளது. இந்த ஈரப்பதமும் அதிகபட்ச வெப்பநிலையும் சேர்ந்து அந்த பகுதியை மேலும் வெப்பம் ஆக்கியுள்ளது. எந்தப் பகுதியில் ஈரப்பதமும் வெப்பநிலையும் அதிகமாக இருக்கிறதோ அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.
வெட் பல்ப் டெம்பரேச்சர்:30 டிகிரிக்கு மேலே 'வெட் பல்ப் டெம்பரேச்சர்' (Wet bulb temperature) இருந்தது என்றால், ஒரு நல்ல ஆரோக்கியமான மனிதனாக இருந்தாலும் கூட ஆறு மணி நேரத்திற்கு மேலே அவரால் தாக்குப்பிடிக்க முடியாது என்பது விஞ்ஞானிகளின் கருத்து.
வட இந்தியாக்களின் 50 டிகிரி செல்சியஸ் வெயில் இருக்கலாம். ஆனால் அது நமது ஊரில் அடிக்கக்கூடிய 30 டிகிரி வெயிலுக்கு இணையானது. நேற்று மெரினாவில் ஈரப்பதம் அதிகமாக இருந்த காரணத்தினால் 35 டிகிரி வெயில் அடித்தால் கூட நமக்கு 45° வெயில் அடிப்பது போல மக்களின் உடலுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
காலநிலை மாற்றம் குறித்த புரிதல் இல்லாமல் ஒவ்வொரு திட்டங்களையும் அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருகிறது. இதன் விளைவு தான் நேற்று நடைபெற்ற இந்த உயிரிழப்புகள். இந்த உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய 'வெட் பல்ப் டெம்பரேச்சர்' குறித்த அபாய மணியாகத்தான் நாம் பார்க்க வேண்டும். எனவே பொது இடங்களில் அதுவும் வெப்பமான பகுதிகளில் கூடுவதை தடை செய்யும் ஒரு சூழல் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
இதையும் படிங்க:"பைக்கை எடுக்கப் போனவரு திரும்பி வரல" - மெரினாவில் கணவரை பறிகொடுத்த இளம்பெண் கண்ணீர்!
காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும்:மற்ற ஊர்களில் விமான சாகச நிகழ்வு நடைபெற்றுள்ளது. அவர்கள் காலையில் நடத்துகின்றனர், சிலர் மாலையில் நடத்துகின்றனர். சென்னையில் கண்டிப்பாக நேரத்தைக் கவனித்திருக்க வேண்டும். ஆனால் நமது அரசு இதை தவறிவிட்டது. சமீப ஆண்டுகளாக வெப்ப அலையின் காரணமாக பல நாடுகளில் பல்லாயிரக்கண மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த வெட் பல்ப் டெம்பரேச்சர் உள்ள நாட்களில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பொது விடுமுறை அளிக்கின்றனர். மேலும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று தனியே மருத்துவமனைகளும் நிறுவியுள்ளனர்.
இந்தியாவும் கிட்டத்தட்ட இந்த நிலைமையை தான் எட்டிக் கொண்டிருக்கிறது.
சமீப காலமாக கிடைத்திருக்கக்கூடிய தரவுகளின் படி பார்க்கும்போது இந்த வருடம் கோடைக்காலத்தில் மட்டும் 733 பேர் மட்டும் வெப்ப அலையால் உயிரிழந்துள்ளனர். அரசாங்க அதிகாரிகளுக்கும் இந்த வெப்ப அலை குறித்தும் காலநிலை மாற்றம் குறித்தும் கூட்டங்கள் நடத்தப்பட்டது பல திட்டங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிஎஸ்சி வெளியிட்டு இருக்கக்கூடிய ஆய்வு அறிக்கையின் படி, இந்தியாவிலேயே மிகவும் வெப்பமான நகரம் என்று சென்னை தான் குறிப்பிடப்படுகிறது. இனிவரும் காலங்களில் அரசாங்க திட்டங்கள் ஏதுவாக இருந்தாலும் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றார் போல திட்டங்களைத் தீட்ட வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" எனக் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்