சென்னை: சென்னை ஐஐடியில் உள்ள கோபாலகிருஷ்ணன் தேஷ்பாண்டே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மையத்துடன், டிடிகே கார்ப்பரேஷன் இணைந்து ‘டிக் விரைவுபடுத்தும் திட்டம்-2024’ என்ற திட்டம் ஒன்றைத் தொடங்குகிறது. சுகாதாரத் தொழில்நுட்பம் மற்றும் நோயறிதல் துறை தொடர்பாக ஸ்டெம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் உருவாகும் புதுமை கண்டுபிடிப்புகளை வளர்த்தெடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இது குறித்து டிடிகே நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவரும், கார்ப்பரேட் மார்க்கெட்டிங் மற்றும் இன்குபேஷன் தலைமையகத்தின் பொதுமேலாளருமான மைக்கேல் போக்சாட்கோ கூறும்போது, பொருளாதார மற்றும் சமூக ரீதியாக, புதுமை மற்றும் மாற்றத்திற்கான இலக்குகளை எட்டும் இந்தியாவின் லட்சியத்திற்கு பங்களிப்பை வழங்கும் எங்கள் நீண்டகால அர்ப்பணிப்பில் இந்த கூட்டாண்மை ஒரு முக்கியமான கூடுதல் படியாகும் என தெரிவித்தார்.
சென்னை ஐஐடி பேராசிரியரும், கோபாலகிருஷ்ணன்- தேஷ்பாண்டே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மையத்தின் ஆசிரியப் பொறுப்பாளருமான கிருஷ்ணன் பாலசுப்ரமணியன் கூறும்போது, “இதன் மூலம் சுகாதார தொழில்நுட்பத்தில் புதுமையான ஸ்டார்ட்அப்களை ஆதரிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. டிடிகே நிறுவனத்தின் தொழில்துறை அனுபவத்துடன் எங்களது தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தொழில்துறை மேம்பாட்டு ஆதரவும் ஒன்றிணைவதன் மூலம் சுகாதாரத் துறையில் அதிநவீனத் தீர்வுகளை ஸ்டார்ட்அப் நிறுவனங்களால் சந்தைக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
இந்தியாவின் மிகச்சிறந்த திறமை, படைப்பாற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்தி சுகாதாரம் மற்றும் நோய் கண்டறிதல் துறைகளை ஊக்குவிப்பதும், மருத்துவ சாதனங்களை உருவாக்குவதும் இக்கூட்டு முயற்சியின் இலக்குகளாகும். சுகாதார தொழில்நுட்ப முயற்சிகளில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டத்தின் மூலமாக உதவி செய்தல், வழிகாட்டுதல், கூட்டுச் சேர்தல், முதலீடு வாய்ப்புகள் ஆகியவை மேற்கொள்ளப்படும். சுகாதார தொழில்நுட்பம் மற்றும் நோய்கண்டறிதல் துறையில் பின்வரும் பிரிவுகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பங்கேற்பை இத்திட்டம் வரவேற்கிறது.