திருச்சி:திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த தங்கையன் என்பவரின் மகன் அந்தோணி (46). இவர் புதிய கட்டிடங்களுக்கு ஒப்பந்த முறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை செய்து கொடுத்து வருகிறார். அந்த வகையில், திருச்சி கிராப்பட்டியில் உள்ள ஒரு வீட்டிற்கு ஒப்பந்தம் அடிப்படையில், எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், அவர் பணியாற்றி வரும் அந்த வீட்டிற்கு முன்பு உயர் மின்னழுத்த கம்பம் ஒன்று இடையூறாக இருப்பதாகக் கூறி, அந்த கம்பத்தை சற்று தள்ளி வைப்பதற்கு கிராப்பட்டியில் உள்ள உதவி செயற்பொறியாளர், இயக்கலும் காத்தலும், மின் பகிர்மான மற்றும் உற்பத்தி கழகம் அலுவலகத்தை அணுகியுள்ளார்.
மேலும், அங்கிருந்த வணிக உதவியாளர் அன்பழகன் என்பவர் கூறியதன் பேரில், ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி உள்ளார். அதன் பின்னர், உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள வணிக உதவியாளர் அன்பழகன் என்பவர், குறிப்பிட்ட இடத்தினை பார்வையிட்டு எஸ்டிமேட் தயார் செய்து கொடுத்துள்ளார்.
பின்னர், ஆன்லைனில் கட்டணமாக 35 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு அந்தோணியிடம் கூறியுள்ளார். அதன் அடிப்படையில், கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி உயர் மின்னழுத்த கம்பத்தை மாற்றி அமைப்பதற்காக 35 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை செலுத்திவிட்டு, அதன் ரசீதினை எடுத்துக் கொண்டு வணிக உதவியாளர் அன்பழகன் என்பவரிடம் அந்தோணி கொடுத்துள்ளார்.