திருச்சி : தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "நவம்பர் டிசம்பர் மாதங்களில் தான் அதிக மழை பெய்யும். ஆனால் தமிழகத்தில் தற்பொழுது அதிக மழை பெய்து வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தயாராக இருக்க வேண்டும்.
மழை அதிகம் பெய்யாத போதே தமிழகத்தில் 5 உயிர்கள் பலியாகி உள்ளது. இதை ஏற்று கொள்ள முடியாதது. சம்பந்தப்பட்ட துறைகள் சரியாக செயல்படவில்லையோ என தோன்றுகிறது. இதற்கு துறை செயலாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழக சிறைகளில் மூன்றாண்டுகளில் நூறு கைதிகள் பலியாகி உள்ளனர். இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். குற்றம் சுமத்தப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தான் தண்டனை பெற்று தர வேண்டும். அவர்களை என்கவுன்டர் செய்யக் கூடாது. காவல் துறையே நீதிபதிகளாக மாறக்கூடாது.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உண்மை தான். அது சட்டத்தின் துணை கொண்டு தான் இருக்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு : சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் உரிய சமூக நீதி சமமாக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனக்கூறி தமிழக அரசு தப்பித்து கொள்வதை ஏற்று கொள்ள முடியாது.
சாதிவாரி கணக்கெடுப்பு மாநில அரசுகள் நடத்த எந்த தடையும் இல்லை. மத்திய அரசு பதவி இடங்களில் இந்திக்காரர்கள் திணிக்கப்படுகிறார்கள். மத்திய அரசின் பணிகளில் 90 சதவீதம் மாநில மக்களுக்கு தான் பணி வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களில் இந்திக்காரர்களை முழுவதுமாக புகுத்துவது ஜனநாயகப் படுகொலை. தமிழகத்தின் உரிமை மறுக்கப்படும் போது தமிழக அரசு மெளனமாக இருக்கிறது.
செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு துணை தலைவராக மருத்துவர் சுதா சேசன் நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அந்தப் பதவியில் ஒரு மருத்துவரை நியமிப்பது தமிழகத்தில் உள்ள தமிழறிஞர்களை அவமதிப்பது போன்று தான்.