சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர், அக்கட்சியின் சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணத்தில் கொத்துக் கொத்தாக தமிழக மக்கள் மரணம் அடைந்துள்ளனர்.
இது குறித்து, முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் தீர்மானத்தை கொண்டுவந்து, சில கருத்துகளையும் சட்டப்பேரவையில் முன்வைத்துள்ளேன். அதாவது கள்ளச்சாராய மரணம் ஏற்படும் போது, காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வதும் அல்லது அவர்களை பணியிட மாற்றம் செய்வதும் ஒரு தீர்வு ஏற்பட போவதில்லை.
குறிப்பாக காவல்துறைக்கு ஏற்கனவே பணிச்சுமை அதிகமாக இருக்கிறது. முதலில் காவல் துறையில் இருக்கிற கூடிய அனைத்து காவலர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளையும் கொடுத்துவிட்டு, பின்னர் இதுபோன்று சம்பவங்கள் உடந்தையாக இருக்கும் அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கி, அவர்களை கைது செய்து சட்டத்துக்கு முன்பாக நிறுத்தி வேண்டும். இதுதான் இதற்கான நிரந்தர தீர்வாக இருக்கும்.
மேலும், இதுபோன்ற சம்பவத்திற்கு காவல்துறை மீது முழு பழியைச் சுமத்தவும் கூடாது. அப்பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உட்பட சட்ட ஒழுங்கை கண்காணிக்கும் அதிகாரிகள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக, பொதுமக்கள் மனு கொடுக்கும் போது மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் மனுவை வாங்குவதில்லை என மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். அதை சரி செய்ய வேண்டும்.