நாமக்கல்:கோழிப் பண்ணைகளுக்கும், முட்டை உற்பத்திக்கும் சர்வதேச அளவில் பெயர்போன ஊரான நாமக்கல், சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 1997 ஆம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 16 ஆவது தொகுதியான நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், ராசிபுரம், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
மூன்று தேர்தல்களை சந்தித்துள்ள நாமக்கல்:2008ம் ஆண்டு நாமக்கல் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட காந்தி செல்வன் வெற்றி பெற்றார். அத்துடன் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராகவும் காந்தி செல்வன் பதவி வகித்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.ஆர்.சுந்தரம் வெற்றி பெற்றார்.அவர் தற்போது திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2019 தேர்தல் வாக்காளர் விவரம்:2019 தேர்தலின்போதுநாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 13 ஆயிரத்து 246 வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் 6 லட்சத்து 95 ஆயிரத்து 247 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 17 ஆயிரத்து 888 பெண் வாக்காளர்களும், 111 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர். இத்தேர்தலில், 11,33,774 வாக்குகள் (83.1%) பதிவாகின.
கொமதேக வசம் போன நாமக்கல்:கடந்த முறை இத்தொகுதியில் திமுக கூட்டணியின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் ஏ.கே.பி சின்ராஜ் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். 6 லட்சத்து 26 ஆயிரத்து 293 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று அவர் எம்.பி.யும் ஆனார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த காளியப்பனை விட 2 லட்சத்து 65 ஆயிரத்து 151 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
2024 தேர்தலில் வாக்குப்பதிவு எவ்வளவு?: கடந்தஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், நாமக்கல் தொகுதியில், 7 லட்சத்து 8 ஆயிரத்து 317 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 44 ஆயிரத்து 087 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 158 பேர் என மொத்தம் 14 லட்சத்து 52 ஆயிரத்து 562 வாக்குகள் பதிவாகின. இத்தேர்தலில், 1136069 வாக்குகள் (78.21%) பதிவாகின.
களத்தில் உள்ள வேட்பாளர்கள்:தற்போது அதிமுக சார்பில் பரமத்திவேலூரில் சமையல் எண்ணெய் தொழிற்சாலை நடத்திவரும் ராஹா தமிழ்மணி, திமுக சார்பில் கடந்தமுறை போன்று அதன் கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் மாதேஸ்வரன், பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் கனிமொழி என்பவரும் போட்டியிட்டுள்ளனர். அவர்கள் மட்டுமின்றி 36 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 40 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
களம் யாருக்கு சாதகம்?:கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சூரியமூர்த்தி குறித்து வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோவில் அவரது குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களை இழிவாக பேசுவது போல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இரண்டே நாளில் சூரியமூர்த்தியை நீக்கிவிட்டு மாதேஸ்வரனை வேட்பாளராக அறிவித்தார்.
அதன் பின்னர், ஒவ்வொரு தேர்தல் பரப்புரையிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பட்டியலின மக்களுக்கு எதிரான கட்சி இல்லை எனவும் ஈஸ்வரன் தெளிவுப்படுத்தினார். இருப்பினும், சூரியமூர்த்தி பேசிய வீடியோ வைரலான நிலையில், குறிப்பி்ட்ட சமூகத்தினரின் வாக்குகள் அதிமுக பக்கம் திரும்புமோ என்ற ஐயம் பரவலாக எழுந்துள்ளது.
ஆனால், அதிமுக வேட்பாளர் தமிழ்மணிக்கு தேர்தல் பரப்புரையின்போதே உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இரண்டு மூன்று நாட்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், அவரால் தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட முடியாமல் போனது. இதேபோல் நாம் தமிழர் மற்றும் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும் பெரிதாக தேர்தல் பரப்புரையில் ஈடுபடவில்லை.
இப்படியாக தேர்தல் பரப்புரையும், 2024 நாடாளுமன்ற தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது. இந்த நிலையில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை குறிவைத்து பேசியது இந்தியா கூட்டணியை பாதிக்குமா? பிற கட்சி வேட்பாளர்களின் பிரச்சாரம் எந்த வகையில் மக்களை ஈர்த்துள்ளது: என்பது ஜூன் 4 ஆம் தேதி தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: தமிழ்நாடு லோக்சபா தேர்தல் 2024; திண்டுக்கல் தொகுதியை கைப்பற்ற போவது யார்? - Dindigul Lok Sabha Election Result