தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எழுத்தாளர் பாவா பாஸ்டினா சூசைராஜ் 2024-ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருதை பெறுகிறார்!

Avvaiyar award 2024: இலக்கியத் துறையில் சிறப்பாக தொண்டாற்றி வரும் பாஸ்டினா சூசைராஜ் (எ) பாமா என்ற எழுத்தாளருக்கு 2024-ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Avvaiyar award 2024
Avvaiyar award 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 10:52 PM IST

சென்னை: இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், இலக்கியத்தின் மூலமாக தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூக தொண்டாற்றி வரும் பாஸ்டினா சூசைராஜ் (எ) பாமா என்ற எழுத்தாளருக்கு 2024-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்காக கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம், மகளிர் உரிமை, மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தமிழுக்கான சேவை, கலை, இலக்கியம், அறிவியல், பத்திரிகை மற்றும் நிர்வாகம் ஆகிய பல்வேறு துறைகளில் முன்மாதிரியாக தொண்டாற்றிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசால் "ஔவையார் விருது" வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது 2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதை பெறுவோருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். அந்த வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் 2024ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை இலக்கியத்தின் மூலமாக தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூக தொண்டாற்றி வரும் முன்னணி எழுத்தாளரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்டினா சூசைராஜ் (எ) பாமா என்ற எழுத்தாளருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பெண்களின் வாழ்க்கையை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை தனது வாழ்வு அனுபவங்களின் மூலம் அதன் தகிக்கும் அனலோடு தமிழிலக்கிய படைப்புகளாகவும், சாதி மற்றும் பாலினம் சார்ந்து சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையையும் அநீதிகளையும் எடுத்துக்காட்டும் தொகுப்புகளாகவும் எழுதியுள்ளார்.

இவரது நூல்களான கருக்கு, சங்கதி, வன்மம், மனுசி போன்ற நாவல்களும், கிசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும் போன்ற சிறுகதை தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவர் எழுதிய "கருக்கு" என்ற புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, 2000ஆம் ஆண்டின் 'கிராஸ் வேர்ட்புக்' விருதை பெற்றுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தலைமைப் பொறுப்பில் பெண்கள் நியமனம்.. தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தடுத்த நகர்வு!

ABOUT THE AUTHOR

...view details