சென்னை: தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயில் வாட்டி வைத்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பத்தால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். ஆகவே, வெப்பத்தின் பிடியில் இருந்து உடலைக் குளுமையாக வைத்திருக்க உதவும் உணவுகளை மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். மக்களும் இளநீர், பதனீர், நுங்கு, நன்னாரி சர்பத், ஜிகர்தண்டா, மோர், கம்மங்கூழ் போன்றவற்றை அருந்தி, உடலை குளுமையாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும், மக்களுக்காக நீர் மோர் பந்தலை அமைத்து, ஆரஞ்சு, தர்பூசணி, முலாம் பழம், திராட்சை உள்ளிட்ட நீர்ச்சத்து பழங்கள், இளநீர், ரோஸ் மில்க், மோர், தண்ணீர் போன்றவற்றையும் வழங்கி வருகின்றனர். தற்போது 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
ஆகவே வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தண்ணீர்பந்தல் (தாகமுள்ள மக்களுக்கு இலவச தண்ணீர் விநியோகம்) திறப்பதற்கான அரசியல் கட்சிகளின் முன்மொழிவின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம், புது டெல்லி, அதன் கடித எண். 464/TN-HP/2024/SS-1/INST, நாள்: 30.04.2024இல், தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட முன்மொழிவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.