வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காட்பாடி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியபோது, "வந்தே பாரத் ரயில் தற்போது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த ரயில் மூலம் பயணம் செய்வதால் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இது நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சி. மேலும், விரைவில் சென்னையில் இருந்து மைசூருக்கு புல்லட் ரயில் வர உள்ளது.
தற்போது காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு, கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு இதற்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை. காங்கிரசும், திமுகவும் கூட்டணியில் இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று தமிழக மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
காவிரியில் தண்ணீர் கொண்டு வரவில்லை; ஆனால் அதிகமாக டாஸ்மாக் கொண்டு வந்தார்கள். இதுதான் திமுகவின் சாதனை. திமுகவும், காங்கிரசும் கூட்டணியில் இருந்து கொண்டு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கொண்டு வரவில்லை. எனவே, தமிழக அரசு எல்லா விதத்திலும் தோல்வி அடைந்து வருகிறது.
கஞ்சா வழக்கில் ஜாபர் சாதிக்கை திமுக காப்பாற்ற நினைக்கிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உயர் நீதிமன்றமே, கஞ்சா விற்பவர்களுக்கும் காவல் துறையினருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். எனவே, திமுகவினருக்கும் சிறை துறையினருக்கும் கஞ்சா நடமாட்டத்தில் அதிக அளவில் தொடர்பு உள்ளது.
கஞ்சா விற்பனையை பொருத்தவரையில், காவல்துறையினருக்கும் அரசியல் கட்சியினருக்கும் எந்த அளவில் தொடர்பு உள்ளது என்பதை கண்காணிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதற்கும், விபத்துக்கள் அதிகரிப்பதற்கும் போதை பொருள்தான் காரணம்.