சென்னை: நேற்று ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கெசரப்பள்ளளி என்னும் இடத்தில், ஆந்திர முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவரும், முன்னாள் தெலங்கானா ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, தமிழிசை செளந்தரராஜன் மேடையில் இருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்துக் கொண்டு சென்றபோது, தன்னைக் கடந்த தமிழிசையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைத்துப் பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, தமிழிசையை அமித்ஷா கண்டிப்புடன் பேசியதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக்கியது. இது தமிழ்நாடு பாஜகவில் மட்டுமல்ல, சில சமுதாய அமைப்புகளிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், தமிழிசை செளந்தரராஜன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “2024 தேர்தலுக்குப் பிறகு நேற்று தான் நான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைச் சந்தித்தேன். அவர் என்னை அழைத்து தேர்தலுக்குப் பிந்தைய நிலை மற்றும் சந்திக்கும் சவால்கள் குறித்து கேட்டார். நான் அதற்கு விரிவாகக் கூறும்போது, நேரமின்மை காரணமாக மிகுந்த அக்கறையுடன் அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளைத் தீவிரமாகச் செய்யுமாறு அவர் அறிவுறுத்தினார். இது அனைத்து விதமான தேவையற்ற யூகங்களையும் தெளிவுபடுத்துவதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் தமிழ்நாட்டில் பாஜகவின் நிலை என்னவென்பது குறித்து பாஜக தலைமை அறிக்கை கேட்டுள்ளதாகவும், இதில் அண்ணாமலையின் தலைவர் பதவிக்கு ஆபத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. அதேநேரம், அதிமுக உடனான கூட்டணி முறிவு குறித்து தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்திருந்த கருத்து கவனம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மேடையில் கடுகடுத்த அமித்ஷா! தடுமாறிய தமிழிசை! என்ன நடக்கிறது பாஜகவில்?