சென்னை:கடந்த 2007ஆம் ஆண்டு பாஜக அலுவலகம் திமுகவினரால் தாக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு 17 வருடங்களாக நடந்து வந்த நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணைக்கு சாட்சி ஆதாரமாக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், 27வது மாஜிஸ்திரேட் வாசுதவேன் முன்னிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
இதற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடக்கக்கூடாது, நடந்ததற்கான சாட்சியங்களை நீதிமன்றத்தில் கூறியிருக்கிறேன். திமுக மாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். திமுக என்றாலே வன்முறை தான். நாணயம் வெளியீட்டு நிகழ்ச்சி வெளிப்படையாக நடந்திருக்கிறது. மாநில அரசு, மத்திய அரசு இணைந்து நடத்தும் விழாவாக நடந்திருக்கிறது. மாநில அரசு கோரிக்கை வைத்ததன் மூலம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விழாவில் வந்திருக்கிறார். அரசு விழா என்பது வேறு, அரசியல் விழா என்பது வேறு.
எந்த விதத்திலும் வன்முறை அரசியலில் இருக்கக்கூடாது என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறேன். வன்முறை அரசியல் எந்த ரூபத்திலும் இருக்கக்கூடாது. எதிர் கருத்துக்கள் வரலாம். அது எதிர்வினை தாக்குதலாக இருக்கக்கூடாது. பாஜகவின் வளர்ச்சி மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு பாஜகவை தாக்கினால், பாஜகவின் வளர்ச்சியை தடுத்து விடலாம் என நினைத்து தான் அந்த தாக்குதல் நடத்தினர் எனக் கூறினார்.
பாரதப் பிரதமர், அண்ணன் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கலைஞர் பற்றிய நல்ல தன்மைகளை எடுத்துக் கூறியிருக்கிறார். இப்படி ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை வரவேண்டும் என நினைக்கிறேன். அரசு விழா அரசியல் விழாவாக விவாதம் ஆக்கப்படக்கூடாது. அரசு விழாவை சுற்றிச் சுற்றி அரசியலுக்குள் கொண்டு வருகிறார்கள். மோடியை கோ பேக் என்று சொல்ல முடியாது. அவ்வாறு கூறியவர்கள் வரவேற்க வேண்டிய நிலை வரும்" என்றார்.