தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களை தவறாக வழிநடத்த முயற்சி: ஆளுநர் மாளிகை காட்டம்! - RAJ BHAVAN CRITICIZE M K STALIN

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சமூக ஊடக பக்கத்தின் மூலம் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி
முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2025, 11:01 PM IST

சென்னை:தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சமூக ஊடக பக்கத்தின் மூலம் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள பதிவில், 'உச்ச நீதிமன்றத்தின் முன்பாக உள்ள ஓர் வழக்கின் விசாரணைக்கு புறம்பான ஒரு விஷயத்தில், ஒரு நாளிதழ் வெளிவந்த கட்டுரையை கொண்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சமூக ஊடக பக்கத்தின் மூலம் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

நமது நாட்டின் நான்காவது தூண், தனக்குப் பிடிக்காதவர்கள் மீது விமர்சனங்களைச் சுமத்துவது உள்ளிட்ட சிறப்புரிமைகளைப் பெற்றிருப்பதற்கு காரணமான நமது துடிப்பான அரசியலமைப்பு ஜனநாயகம் மற்றும் வலுவான கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் சூழலுக்கு நன்றி.

இருப்பினும், அரசியலமைப்பில் உயரிய பதவியை வகிக்கும் ஒரு முதலமைச்சர், நீதிமன்ற விசாரணைக்கு புறம்பாக அமையக்கூடிய விஷயத்தில் தனது அரசியலமைப்புப் பொறுப்பை அப்பட்டமாக மதிக்காமல், மிகவும் தரம் தாழ்ந்து முற்றிலும் பாதி உண்மைகள் மற்றும் பாரபட்சம் நிறைந்த ஒரு நாளிதழின் கருத்துக்களை தனது விரக்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு ஊன்றுகோலாக, தனது முழுமையான நிர்வாகத் தோல்வியை மறைக்கவும், தனது அரசியல் பாதுகாப்பின்மையை மறைக்கவும் பயன்படுத்தியிருப்பது பரிதாபத்துக்குரியது. தமிழ்நாட்டு மக்கள் அவர் நினைப்பதை விட மிகவும் புத்திசாலிகள்.' என்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள பதிவில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மாநில துணைவேந்தர் நியமன திருத்த சட்ட மசோதா உள்ளிட்ட தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காதது குறித்து, தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த வாரம் நான்கு நாட்கள் விசாரிக்கப்பட்டது.

அப்போது மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம்தாழ்த்தி வருவது தொடர்பாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். வழக்கு விசாரணையின்போது ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் தெரிவித்த அதிருப்தி கருத்துகளை கொண்டு, பிரபல ஆங்கில நாளிதழில் இன்று கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த கட்டுரையை தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழக ஆளுநரின் அரசியல் சட்டத்திற்கு முரணான அத்துமீறல்கள் இக்கட்டுரையில் சரியாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்றும்,பாஜக ஆட்சியில் இந்தியாவின் கூட்டாட்சி கடும் ஆபத்தில் உள்ளது எனவும் குறிப்பி்ட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details