தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி: கடந்த ஆண்டை விட காற்று மாசு குறைவு; தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் கூறிய தகவல் என்ன? - TAMIL NADU AIR POLLUTION

இந்த வருட தீபாவளி பண்டிகையில் காற்றின் மாசு வெகுவாக குறைந்துள்ளது என்று தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

காற்று மாசு
காற்று மாசு (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2024, 11:25 AM IST

சென்னை:நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தீபாவளி பண்டிகையின் போது வெடிக்கப்பட்ட பட்டாசு காரணமாக ஒலி மற்றும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒலி மற்றும் காற்று மாசு ஆகியவற்றை கணக்கிட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளித்துள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; '' சென்னை உள்ளிட்ட முக்கிய நகரில் காற்றின் தரம் மற்றும் ஒலி அளவு ஆய்வு பற்றிய அறிக்கையை உச்சநீதிமன்றம் ஆணையின் படி மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் முக்கியமான நகரங்களில் குறுகிய கால கண்காணிப்பாக 15 நாட்களுக்கு கணக்கிட உத்திரவிட்டு இருந்தது.

அதில் தீபாவளிக்கு 7 நாட்களுக்கு முன்பாகவும், தீபாவளிக்கு 7 நாட்களுக்கு பின்பாகவும் முக்கிய காற்று மாசு காரணிகளின் அளவுகளை கண்காணிக்க மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும், உச்சநீதிமன்ற ஆணையின் படி மற்றும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய அறிவுறுத்தலின் படி தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவின் படி, பசுமை பட்டாசுகளை 31.10.2024 காலை 06.00 முதல் 07.00 மணி வரையிலும்,இரவு 07.00 முதல் 08.00 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து மாவட்ட ஆட்சியாளர்கள், மாநகராட்சி ஆணையாளர்கள், காவல்துறை, பள்ளி, கல்லூரி மாணவர்கள், செய்தி மற்றும் ஊடகங்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் தாக்கத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் மத்திய உளவு பிரிவு எஸ்.ஐ திடீர் மரணம்.. நடந்தது என்ன..?

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுப்புற காற்றின் மாசு தர அளவையும் மற்றும் ஒலி மாசுபாடு அளவையும் கண்டறிய, சென்னை பெருநகரம் உட்பட மாநிலத்திலுள்ள பிரதான மாவட்டங்களில் காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்தவகையில் சென்னை-7, கோயம்புத்தூர்-2, கடலூர்-2, மதுரை-2, திருநெல்வேலி-2,நாகர்கோயில்-2, தஞ்சாவூர்-2, திருச்சி-2, வேலூர்-2, சேலம்-2, செங்கல்பட்டு-2, திண்டுகல்-2, ஓசூர்-2, தூத்துக்குடி-2, திருப்பூர்-2, நாகப்பட்டினம்-2 மற்றும் காஞ்சிபுரம்-2 ஆகிய 39 இடங்களில் ஆய்வுகளை 24.10.2024 முதல் 07.11.2024 ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

நேற்று (31.10.2024) காலை 6.00 மணி முதல் மறுநாள் 1.11.2024 காலை 6.00 மணி வரை, காற்றுத் தர அளவு கண்காணிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், காற்றுத் தர குறியீட்டு அளவு Air Quality Index (AQI) சென்னை பெருநகரில் குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 150 (AQI மிதமான அளவு), அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 287 வரை (AQI மோசமான அளவு) என ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் காற்றுமாசு ஆய்வறிக்கை அட்டவணை-1ல் இணைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையன்று 31.10.2024 (மாலை 6 மணிமுதல் இரவு 12 மணிவரை) ஒலி மாசின் அளவு (அதாவது 31.10.2024) குறைந்த அளவாக ஒலி மாசுபெசன்ட் நகரில் 59.8 dB(A)ம், அதிகபட்ச அளவாக ஒலி மாசு நுங்கம்பாக்கத்தில்78.7 dB(A)ம் கண்டறியப்பட்டது. மேலும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் காற்று மாசு கணக்கிடப்பட்டது.

தீபாவளி அன்று கண்டறியப்பட்ட ஒலி மாசு அளவுகள், வரையறுக்கப்பட்ட தேசிய சுற்றுப்புற ஒலிமாசின் அளவுகளை விட அதிகமாக உள்ளது என கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு தீபாவளி யின் போது வளசரவாக்கத்தில் அதிகபட்சமாக காற்ற மாசு 365 மற்றும் ஒலி மாசு அதிகப்படியாக சௌக்கார்பேட்டையில் 83.1 dB என்றும் கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது பொதுமக்களின் ஒத்துழைப்பும், மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களாலும் இந்த ஆண்டு காற்றின் மாசு வெகுவாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details