தமிழ்நாடு: நாம் தமிழர் கட்சியின் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கலாமணி, அந்த கட்சியின் நிர்வாகிகளுடன் சென்று திருப்பூர் மாவட்டம் மங்கலம், சுல்தான் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மைக் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது சுல்தான் பேட்டையில் டிரம்ஸ் வாசித்தும், கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து நடனம் ஆடியும் வாக்கு சேகரித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று வேட்பாளர் கலாமணி உடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடி வாக்கு சேகரித்தனர்.
மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரிப்பு: தஞ்சாவூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவநேசன் திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாத்தூர், நல்லிச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். மாத்தூர் காளியம்மன் கோயிலில் வழிபட்ட வேட்பாளர் சிவநேசனுக்குக் கோயிலில் பூர்ண கும்ப மரியாதையுடன் பரிவட்டம் கட்டி வரவேற்றனர்.
பின் வேட்பாளர் சிவனேசன் தன் உடன் வந்த கட்சி நிர்வாகிகளுக்கு இளநீர் வெட்டி கொடுத்தார். பின்னர் மாத்தூர் சாலையில் இரட்டை மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரித்து வந்தார். அப்போது மாடு மிரள வண்டியிலிருந்து தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.
பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரிப்பு: மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு கும்பகோணம் அருகேயுள்ள திரு வலஞ்சுழி பகுதியில் இன்று காலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, அங்குள்ள கணேஷ் பவன் என்ற ஹோட்டலில், பஜ்ஜி சுடும் தொழிலாளருக்கு உதவிடும் வகையில், வேட்பாளர் பஜ்ஜி சுட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.