கோவை: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட தனியர் தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசபிரபு கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேட்டறிந்தார். மேலும் சிகிச்சை பெற்று வரும் நேசபிரபுவை பார்த்து அவரது உறவினர்களிடம் ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் பேசிய அமைச்சர் எல் முருகன், "பல்லடம் பகுதியில் செய்தியாளர் மிகவும் கொடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்தியாளர் காவல் துறையிடம் உதவி கேட்டும் உதவி மறுக்கப்பட்டு இருக்கிறது.
உரிய நேரத்தில் காவல் துறை உதவி செய்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்க முடியும். மிக அலட்சியமாக இருந்த காவல்துறை அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் ஊடகத்தில் உள்ள நபருக்கே பாதுகாப்பற்ற சூழல் தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு கேள்விக்குறியாக இருக்கிறது என்பது இந்த சம்பவம் காட்டியுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பல்லடம் பகுதியில் 3 மாதங்களுக்கு முன்னால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை இதேபோன்று சரமாரியாக வெட்டினார்கள். தோட்டத்தில் ஏன் மது அருந்துகிறார்கள் என கேட்டதற்காக நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதே பகுதியில் தான் நடைபெற்றது. நியாயமான செய்தியை தைரியத்தோடு கொடுக்கின்ற செய்தியாளர்களுக்கு நியாயம் இல்லை. பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. சட்டம், ஒழுங்கு இருக்கிறதா? என்பது இன்றைக்கு தெரியவில்லை. அயோத்தியில் ராமர் கோயில் நிகழ்ச்சி எங்கேயாவது ஒளிபரப்பவார்களா? அல்லது பாஜக கொடியேற்றுகிறாளா? இதை பார்க்கும் வேலையை தான் காவல்துறையினர் செய்கின்றனர்.