டெல்லி: 18-ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிந்து முதல் கூட்டம் நேற்று கூடியது. பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்பிக்களாக பதவியேற்றுக் கொண்டனர். மக்களவையின் இடைக்கால சபாநாயகரும், பாஜக எம்பியுமான பர்த்ருஹரி மகதாப் எம்பிக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இரண்டாவது நாளான இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எம்பிக்கள் 40 பேர் மற்றும் இதர எம்பிக்கள் அடுத்தடுத்து பதவியேற்றுக்கொண்டனர். முதலாவதாக பதவியேற்ற திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், அரசியல் சாசனப் புத்தகத்துடன் வந்து தமிழில் உறுதிமொழி ஏற்றார். பின்னர் வாழ்க தமிழ், தலித்-ஆதிவாசிகள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நிறுத்துக என முழக்கமிட்டார்.
வேண்டாம் நீட் BAN நீட்: பின்னர் பதவியேற்ற திமுக எம்பி கலாநிதி வீராசாமி, தமிழில் உறுதிமொழி ஏற்ற பின்னர் பெரியார், அண்ணா, கலைஞர் வாழ்க, தமிழ் வாழ்க என முழக்கமிட்டார். அதனைத் தொடர்ந்து பதவியேற்ற தமிழச்சி தங்கபாண்டியன் வாழ்க தளபதி, வாழ்க தமிழ்த் திருநாடு என்றார். அதனைத் தொடர்ந்து பதவியேற்ற திமுக எம்பி தயாநிதி மாறன், வாழ்க பெரியார், வாழ்க அண்ணா, வாழ்க கலைஞர், வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், வாழ்க உதயநிதி ஸ்டாலின், "வேண்டாம் நீட்! BAN நீட்" என ஆவேசத்துடன் முழக்கமிட்டார்.