சென்னை: மாநிலங்களவையில் நேற்று அரசியல் சாசனம் மீதான விவதாம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அவர் தற்போது 'அம்பேத்கர், அம்பேத்கர்' என்று பேசுவது பேஷனாகி விட்டது. இப்படி சொல்வதற்கு பதிலாக கடவுளின் நாமத்தை பல முறை உச்சரித்திருந்தால், அவர்களுக்கு சொர்க்கமாவது கிடைக்கும்.
இருந்த போதும் அம்பேத்கர் பெயரை காங்கிரசார் சொல்வது பாஜகவிற்கு மகிழ்ச்சியை தருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியினர் உண்மையான உணர்வுகளுடன் செயல்பட வேண்டுமென்றார். இவரின் இந்த பேச்சு இந்தியா கூட்டணி மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: இதனைக் கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அதிக பாவங்கள் செய்பவர்கள் தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்; சொல்ல வேண்டும்," எனப் பதிவிட்டுள்ளார்.
திருமாவளவன்:புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்? எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார்.
அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம். அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் உண்மையான எதிரிகள். இதனையே விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். சங்பரிவார்கள் புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள். புரட்சியாளர் அம்பேத்கர் ’விசுவரூபம்’ எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும்" என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க :"அம்பேத்கரை அவமதித்த காங்கிரஸின் இருண்ட வரலாற்றை அமித்ஷா அம்பலப்படுத்தினார்" -பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் பதிவில் கூறியிருப்பது என்ன?