சென்னை:வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நேற்று (நவ.26) இரவு முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று மாலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது தமிழக கடற்கரை பகுதி நோக்கி நகர்ந்து வருவதாகவும், நாளை சூறாவளிப்புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆரஞ்சு அலர்ட்: இதற்கிடையே, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் நிலையில், இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நவம்பர் 26, 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்னிந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயரிடும் முறைப்படி, இந்த முறை சவுதி அரேபியா நாடு பரிந்துரைத்த ‘ஃபெங்கல்’ (FENGAL Cyclone) என்ற பெயர் இந்த புயலுக்கு வைக்கப்பட உள்ளது.
இன்று காலையிலிருந்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டுப் பலத்த மழை பெய்து கொண்டிருப்பதால், தாழ்வான சாலைகளை நோக்கி மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அதனால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ரெட் அலர்ட் எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?