சென்னை: 2024 மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை ஒட்டி, மாநிலத்தில் திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகின்றன. அந்த வகையில், திமுக தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்து, திமுக நேரடியாக களம் காணும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. அதேபோல், அதிமுகவும் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இந்த நிலையில், பாஜக தலைமையிலான கூட்டணியில் கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, தமிழ்நாடு பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜக நேரடியாக களம் காணும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, பாஜக 19 தொகுதிகளில் நேரடியாக களமிறங்குகிறது. இதன் அடிப்படையில்,
- திருவள்ளூர்
- வட சென்னை
- தென் சென்னை
- மத்திய சென்னை
- கிருஷ்ணகிரி
- திருவண்ணாமலை
- நாமக்கல்
- திருப்பூர்
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- பொள்ளாச்சி
- கரூர்
- சிதம்பரம்
- நாகப்பட்டினம்
- தஞ்சாவூர்
- மதுரை
- விருதுநகர்
- திருநெல்வேலி
- கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
அதேபோல், பாட்டாளி மக்கள் கட்சிக்கு பாஜக கூட்டணியில் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி,
- அரக்கோணம்
- ஆரணி
- விழுப்புரம்
- காஞ்சிபுரம்
- சேலம்
- கள்ளக்குறிச்சி
- தருமபுரி
- மயிலாடுதுறை
- திண்டுக்கல்
- கடலூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.
அந்த வகையில், புதிய நீதிக்கட்சி வேலூர் மக்களவைத் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் மக்களவைத் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும் போட்டியிடுகின்றன. இந்த நான்கு கட்சிகளும் தாமரை சின்னத்தில் களமிறங்குகின்றன.