தமிழ்நாடு

tamil nadu

வாக்கு வங்கிக்காக பிரதமர் குறித்து திமுக அவதூறு பரப்புகிறது: ஜி.கே.வாசன் சாடல்! - GK Vasan slams DMK

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 10:21 AM IST

GK Vasan: பிரதமர் மோடி குறித்து தேவையில்லாத கருத்துகளை பரப்பி, வாக்கு வங்கிக்காக மக்களை திமுக ஏமாற்ற நினைப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டினார்.

GK Vasan election Propaganda
GK Vasan election Propaganda

ஜிகே வாசன்

திருவள்ளூர்:நாடாளுமன்ற தேர்தல் பிரசார பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், திருவள்ளூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதியை ஆதரித்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் மேற்கொண்டார்.

முன்னதாக பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், திருவள்ளூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், "முருகனை தரிசனம் செய்துவிட்டு பாலகணபதிக்காக வாக்கு சேகரிப்பது விசேஷமான ஒன்று. 10 ஆண்டுகளாக மோடி ஆட்சியின் தொடர் சாதனைகளே வெற்றிக்கு அடித்தளமாக அமையும். பாஜக தரப்பில் போட்டியிடும் வேட்பாளரின் வெற்றி, மக்களின் வெற்றி" எனக் கூறினார்.

தொடர்ந்து பாஜவில் புதிதாக இணையும் மக்களிடம் மட்டும் தான் பேசுவதாகவும், மற்ற கட்சியினரை தவிர்ப்பதாகவும் கூறி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு, "மேடையில் இருக்கும் எங்களுக்கு தெரியாதது, கால் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு தெரிகிறதா.

கூட்டம் முடிந்த பிறகு கூட்டணிக் கட்சி தலைவர்களிடம் எவ்வாறு பேசுகிறார்கள் என்பது பத்திரிக்கையாளர்களுக்கு எப்படித் தெரியும். பிரதமர் மோடி தமிழகம், கலாச்சாரம், பண்பாடு, தமிழ் மொழி ஆகியவற்றை மிகவும் நேசிப்பவர். செங்கோலை வரலாற்று பிரபலமாக்கியவர். தோற்பது உறுதி என்பதால் மோடி பற்றி எதிர்க்கட்சியினர் அவதூறு பேசுகின்றனர்.

மேலும், பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணியில இருக்கும் அனைத்து கட்சித் தலைவர்களின் பெயரையும் சொல்லி அழைப்பது, அவர் கூட்டணி கட்சியினர் மீது கொண்டுள்ள அன்பை காட்டுகிறது. தேர்தல் சமயம் பார்த்து பிரதமர் மோடி குறித்து தேவையில்லாத கருத்துகளை பேசி, வாக்கு வங்கிக்காக மக்களை ஏமாற்ற நினைக்கும் திமுகவை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை" என தெரிவித்தார்.

இதனிடையே, பாஜக தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுள் ஒன்றான ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வி.என்.வேணுகோபாலை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது, தவறுதலாக கைச் சின்னத்தில் வாக்களியுங்கள் எனக் கூறிவிட்டு பின்னர் அதை சூசகமாக சமாளித்தார். இது குறித்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலகி வருகிறது.

இதையும் படிங்க:ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

ABOUT THE AUTHOR

...view details