சென்னை:சென்னை மேயர் பிரியாவின் தபேதாராக பணிபுரிந்து வந்த மாதவி கடந்த மாதம் மணலி மண்டல அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். பணிக்கு சரியாக வராத காரணத்தினால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக அப்போது தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு வேறு காரணம் வெளிவந்திருக்கிறது. பணியிட மாற்றம் குறித்து தமிழகத்தின் முதல் பெண் தபேதாரும், சென்னை மேயர் பிரியாவின் தபேதாருமான மாதவி ஈ டிவி பாரத் செய்திக்கு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது; கடந்த மாதம் ஆகஸ்ட் 6ஆம் தேதி மேயர் அலுவலகத்திலிருந்து எனக்கு மெமோ கொடுக்கப்பட்டது. அதில் 5 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
அதில் முதல் கேள்வியாக, அலுவலக நாட்களில் உரிய நேரத்திற்கு வராமல் இருந்து உள்ளீர்கள்? என கேட்கப்பட்டது. அதற்கு நான், '' வெகு தொலைவில் இருந்து அலுவலகத்திற்கு தினமும் வந்து செல்கிறேன். எனது கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. என்னால் வேகமாக நடக்க முடியாது. இதனால் அலுவலகத்தில் நேரத்திற்கு முன்னதாக வர இயலவில்லை. மேலும், அலுவலகத்திலிருந்து இரவு 8 மற்றும் 9 மணிக்கு செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. இரவு தாமதமாக வீட்டுக்கு செல்வதால் சமைத்து விட்டு படுப்பதற்கு 12 மணிக்கு மேல் ஆகிறது எனவே அடுத்த நாள் பணிக்கு வர தாமதம் ஆகிறது என பதில் அளித்து இருந்தேன்.
இரண்டாவது கேள்வியில், தொடர்ந்து கால தாமதமாக வருவதற்கான காரணம் என என்று கேட்கப்பட்டது. நான் அதற்கு, '' தினமும் அலுவலகத்திற்கு உரிய நேரத்திற்கு வந்து விடுகிறேன். ஆகஸ்ட் 6 ஆம் தேதி கால தாமதமாக அலுவலகத்திற்கு 10:30 மணிக்கு வர நேரிட்டது. அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க என்னுடைய செல்போனில் நெட்வொர்க் பிரச்சினையாக இருந்ததால் தகவல் தெரிவிக்க முடியவில்லை'' என்றேன்.
அடுத்ததாக, முறைப்பணி நாட்களில் முறையாக பணி வராமல் ஏன் தவிர்த்தீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நான், எனது முறை பணி காலங்களில் முறையாக பணிக்கு வந்துள்ளேன். நான் முறைப்பணி முறையாக செய்யவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளீர்கள்.. எந்த முறை பணி நாட்களில் வரவில்லை என தெரிவிக்க முடியுமா'' என்ற கேள்வியுடன் பதில் தெரிவித்து இருந்தேன்.
அடுத்ததாக, உயர் அதிகாரிகளின் ஆணையை உதாசீனப்படுத்தி உள்ளீர்கள் என்று கேட்கப்பட்டது. நான் அதற்கு, ''தாங்கள் எனக்கு என்ன ஆணை வழங்கினீர்கள்? எந்த ஆணையை நான் உதாசீனப்படுத்தினேன் என விவரமாக கூற முடியுமா'' என்ற கேள்வியை எழுப்பியிருந்தேன்.
கடைசியாக, அலுவலக நடைமுறைகளை மீறி உள்ளீர்கள் என கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதில் அளித்த நான், '' தாங்கள் என்னை உதட்டிற்கு பூசுகின்ற சாயம் போடக்கூடாது என்று கூறினீர்கள். நான் உங்களை மீறி பூசினேன். இது குற்றம் என்றால், அது எந்த அலுவலக ஆணையில் உள்ளது என்று தெரியப்படுத்தவும்'' என்று பதில் அளித்து இருந்தேன்.
நான் கேட்ட எந்த பதில் கேள்விக்கும் விளக்கம் கொடுக்காமல் மறு நாளே (07.08.2024) பணியிட மாறுதல் உத்தரவு வழங்கியிருந்தனர். பணியிட மாறுதல் உத்தரவு குறித்து என்னுடைய மேல் அதிகாரியிடம் (AC CAP) தெரிவித்த போது உடனடியாக பணியிட மாறுதலுக்கு செல்லுங்கள் என தெரிவித்திருந்தார். நானும் எனக்கு கொடுக்கப்பட்ட பணி இடமாறுதல் இடமான மணலி மண்டல அலுவலகத்திற்கு சென்று பணியாற்றி வருகிறேன்.
நான் என் பணியை சரியாக செய்திருக்கிறேன். ஆனாலும் எனக்கு வழங்கப்பட்ட பணி மாறுதல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன் என தெரிவித்தார். பணிக்கு தாமதமாக வருவதால் பணி மாறுதல் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.