தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுள்ளுனு அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு ஜிகர்தண்டா.. மதுரை ஜிகர்தண்டாவின் மகத்துவம் பேசும் தொகுப்பு! - Madurai Famous Jigarthanda - MADURAI FAMOUS JIGARTHANDA

Madurai Famous Jigarthanda: கோடையின் கொளுத்தும் வெயிலைச் சமாளிக்க மதுரைக்காரர்கள் அனைவரும் ரசித்துச் சுவைக்கும் ஒரு ராஜ பானம் தான் ஜிகர்தண்டா. இந்த பானம் குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.

Madurai Famous Jigarthanda
சுல்லுனு அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு ஜிகர்தண்டா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 3:40 PM IST

மதுரை ஜிகர்தண்டா

மதுரை: இதுவரை இல்லாத வகையில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. லிட்டர் கணக்கில் தண்ணீரைப் பருகினாலும், நாளொன்றுக்கு மூன்று முறை குளித்தாலும் இந்த வெப்பத்தைத் தணிப்பதற்கு வழியே இல்லாத தட்பவெப்பம் நிலவுகிறது.

ஆனால், ஒரே ஒரு பானம் மொத்த புழுக்கத்தையும் நீக்கி, மனதிற்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தருகிறது என்றால் அது மதுரையின் மற்றும் ஒரு அடையாளமாகத் திகழும் ஜில் ஜில் ஜிகர்தண்டாதான். மதுரை மாநகரின் எந்தப் பக்கம் சென்றாலும் ஏதேனும் ஒரு ஜிகர்தண்டா கடையைப் பார்க்காமல் கடந்து செல்ல முடியாது.

மதுரைக்கு மல்லிகைப்பூவும், இட்லியும், கள்ளழகரும், மீனாட்சியும் எப்படியோ, அப்படி ஒரு அடையாளம்தான் ஜிகர்தண்டாவும். ஒருமுறை இதனைச் சுவைத்து விட்டார்கள் என்றால், பிறகு வாழ்நாள் முழுவதும் இதற்கு அடிமையாகிப் போவார்கள் என்பது நிச்சயமான உண்மை.

அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தோர், ஜிகர்தண்டாவுக்காகவே மதுரைக்கு வந்து செல்வதும்கூட மிகச் சாதாரணம். இது குறித்து தருமபுரி மாவட்டம் சில்லாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியர்கள் கூறுகையில், "மீனாட்சி அம்மனை தரிசிப்பதற்காக வந்தோம். அங்குக் கூட்டம் அதிகமாக இருந்தது. தரிசனத்தை முடித்துவிட்டு மதுரை ஜிகர்தண்டா சுவையை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே ஏறக்குறைய ஒரு மணி நேரம் கீழவாசல் அருகே உள்ள இந்த கடையின் முன்பு காத்திருந்து சுவைத்து மகிழ்ந்தோம். இந்த வெயிலுக்கு மிக மிக இதமான பானமாக உள்ளது. இப்போதுதான் முதல்முறையாக மதுரை ஜிகர்தண்டாவைப் பருகுகிறோம். வேறு எந்த பகுதியிலும் இதுபோன்ற சுவை இருக்காது" என்று உணர்ச்சி பொங்க ஜிகர்தண்டா சுவையை எடுத்துரைத்தார்.

மதுரையில் ஜிகர்தண்டா கடைகளை நடத்துபவர்கள் பெரும்பாலும் ஒரே குடும்பத்தின் பல்வேறு கிளைகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இஸ்லாமியர்களே இக்கடையைப் பல தலைமுறைகளாகத் தொன்று தொட்டு நடத்தி வருகின்றனர்.

மதுரை விளக்குத்தூண் அருகேயுள்ள பேமஸ் ஜிகர்தண்டா கடையின் இயக்குநர் அமானுல்லா கூறுகையில், "என்னுடன் பிறந்த சகோதரர்களில் நான் இளையவன். அவர்கள் அனைவருமே ஜிகர்தண்டா கடைகளை வெவ்வேறு பகுதிகளில் நடத்தி வருகின்றனர். என்னுடைய தகப்பனார் ஷேக் மீரான் மதுரையில் முதல் முதலாக ஐஸ்கிரீம் விற்பனையைத் தனது தள்ளுவண்டியின் மூலமாகத்தான் செய்து வந்தார்.

பாய் ஐஸ் என்றாலே மதுரைக்காரர்கள் பெரும்பாலானோருக்குத் தெரியும். அதற்குப் பிறகு 1977ஆம் ஆண்டில் மாலை நேரங்களில் ஜிகர்தண்டாவைத் தள்ளு வண்டியின் மூலமாக கீழவாசல் பகுதியில் விற்பனை செய்து வந்தோம். கடந்த 2000மாவது ஆண்டில்தான் இங்கே தனி கடை ஒன்றை உருவாக்கினோம்.

கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள எங்கள் கடையில் கிடைக்கும் ஜிகர்தண்டாவின் சுவை தனிச்சிறப்பு வாய்ந்தது. இதே போன்ற சுவையைப் பிற கடைகளில் உணர முடியாது. பொதுமக்களின் கருத்தும் அதுவாகத்தான் உள்ளது. ஜிகர்தண்டா பொதுவாகவே மருத்துவ குணம் வாய்ந்த ஒரு குளிர்பானம். பாதாம் பிசின் நன்னாரி சர்பத் இவற்றையெல்லாம் நாங்களே தயார் செய்கிறோம். இதற்குத் தேவையான பாலை எங்கள் பண்ணையிலிருந்து நாங்கள் உற்பத்தி செய்கிறோம்.

நாங்கள் தள்ளுவண்டியில் விற்பனை செய்த காலத்திலிருந்து பொதுமக்கள் எங்களுக்கு அமோக ஆதரவைத் தருகிறார்கள். ஆகையால் இந்த விலைக்கு எங்களால் மட்டுமே தர முடியும். வெளிநாட்டு மக்கள் மட்டுமன்றி அரசியல், திரைப்பட பிரமுகர்கள் கூட வந்து பருகியும், வாங்கியும் செல்கிறார்கள்.

மதுரை அடையாளமாக ஒரு காலத்தில் இட்லியும், மல்லிகைப்பூவும் இருந்தது. ஆனால் அவற்றைத் தாண்டி தற்போது ஜிகர்தண்டா முதலிடத்தில் உள்ளது. இதனை நாங்கள் விளம்பரப்படுத்தி வளரவில்லை. எங்களது பொருளைப் பயன்படுத்திய மக்கள் பிறரிடம் கூறி அதன் மூலமாக நாங்கள் வளர்ந்தோம்.

பெரியவர் ஷேக் மீரான் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் தாலுகாவிலுள்ள ஆறாம்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது காலத்தில்தான் ஜிகர்தண்டா கொண்டு வரப்பட்டது. இந்த பானம் வடக்கிலிருந்து இங்கே கொண்டுவரப்பட்டதாகும். இந்தப் பெயரை மட்டும் எடுத்துக்கொண்டு, அதன் மூலப்பொருட்கள் இங்குள்ள மக்களின் உடல் நலனுக்கு ஏற்றாற் போன்று பெரியவர் ஷேக்மீரானால் மாற்றி அறிமுகப்படுத்தப்பட்டது.

மதுரையில் தயாரிக்கப்படும் ஜிகர்தண்டாவுக்கான மூலப்பொருட்களே மிகச் சுவை மிக்கவை. பாலாடை, பாதாம் பிசின், கடற்பாசி, நன்னாரி சர்பத், ஐஸ்கிரீம் என்ற கலவைகளே ஜிகர்தண்டாவாக மாற்றம் பெறுகின்றன. கோடைக் காலத்திலும், நகர்ப்புற 'ஷாப்பிங்' சமயங்களிலும் மதுரை மக்கள் புத்துணர்ச்சிக்கான தங்களின் தேர்வாக முதன்மைப் பட்டியலில் வைத்திருப்பது ஜிகர்தண்டாதான்" என்று ஜிகர்தண்டாவின் பெருமையைத் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து, மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மீ.மருது பாண்டியன் கூறுகையில், "மதுரையை பொதுவாகக் கோயில்களின் நகரம் அல்லது திருவிழாக்களின் நகரம் என்றுதான் அடையாளப்படுத்துவார்கள். ஆனால், அதைத் தாண்டி ஒரு உணவுப் பொருளின் வாயிலாக மதுரை உலகம் தழுவிய அடையாளத்தைப் பெறுகிறது என்றால் அதற்குக் காரணம் ஜிகர்தண்டா.

ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் வாங்கிப் பருகக்கூடிய ஒரு சுவை மிக்க பானம் தான் ஜிகர்தண்டா. மதுரையின் கோடைக் காலத்தை ஜிகர்தண்டாவைப் பருகாமல் கடந்துவிட முடியாது. குளிர்ந்த இதயம் என்ற பொருளில் ஜிகர்தண்டா பெயர்க் காரணம் அமைந்துள்ளது.

கி.பி.1542 முதல் கி.பி‌.1605 வரை ஆண்ட அக்பரின் சுயசரிதையான அயினி அக்பரியில், ஜிகர்தண்டாவைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வெப்ப காலங்களில் தங்களது உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இது போன்ற பானங்களைப் பயன்படுத்தி உள்ளனர். மதுரைக்கு வருகின்ற அனைவரும் இந்த ஜிகர்தண்டாவைப் பருகாமல் செல்வதில்லை" என்று ஜிகர்தண்டாவின் வரலாற்றை எடுத்துரைத்தார்.

மதுரையிலுள்ள சில கடைகள் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட சில கிழக்காசிய நாடுகளுக்கும் இங்கிருந்து ஜிகர்தண்டா ஏற்றுமதி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், மதுரையின் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகப்பெரிய ஒன்று சக்தியாக இந்த ஜிகர்தண்டா கடைகள் திகழ்கின்றன. வட இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜிகர்தண்டாவுக்கும், மதுரையில் தயாரிக்கப்படும் ஜிகர்தண்டாவுக்கும் பெருமளவு வேறுபாடுகள் உண்டு. கடல்பாசி பயன்படுத்தப்படுகின்ற காரணத்தாலேயே மதுரை ஜிகர்தண்டாவுக்கு தனிச்சிறப்பு உருவானது.

அதுமட்டுமன்றி, நன்னாரி சர்பத்துக்குப் பயன்படுத்தக்கூடிய செடிகள் மதுரையைச் சுற்றி பல்வேறு மலையடிவாரங்களில் காண முடியும். இவையெல்லாம் மருத்துவம் குணம் மிக்கவை. எவ்வளவு வெப்பநிலை இருந்தாலும், அதனைச் சமன்படுத்தக்கூடிய இந்தக் கலவைகள்தான் மதுரை ஜிகர்தண்டாவின் வெற்றிக்குக் காரணம்.

மதுரை வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மதுரையின் வரலாற்றுப் பாரம்பரியம் மற்றும் தொன்மை குறித்து நினைவிருக்கிறதோ இல்லையோ, ஆனால் அவர்கள் பருகிச் சென்ற ஜிகர்தண்டாவின் சுவை அவர்களது நாவிலும் நினைவிலும் நிலைத்திருக்கும். நினைக்கும்போதே நாவை சுழட்டச் செய்யும் ஜிகர்தண்டாவைச் சுவைக்காமல் இனி மதுரையின் நினைவுகளை யாரும் கொண்டு செல்ல முடியாது என்பதே உண்மை.

இதையும் படிங்க:கவனம் மக்களே.. தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீச வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details