தேனி:தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தினரை போலீசார் காப்பாற்றி, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், போடிநாயக்கனூர் அருகே மாணிக்கபுரம் கிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆண்டுதோறும் நடைபெறும் கோயில் திருவிழாவிற்காக இந்த சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தினரிடம் வரி வசூல் செய்து கோயில் திருவிழா நடைபெற்று வருவது 50 ஆண்டுகால வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்தப் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும், அதே சமுதாயத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவருக்கும் இடையில் கட்சி போஸ்டர்கள் ஓட்டுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு அடிதடியில் முடிந்த நிலையில், இது சம்பந்தமாக கடந்த ஆண்டு மே மாதத்தில் தேனி அருகே உள்ள வீரபாண்டி காவல் நிலையத்தில் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, 13 நபர்கள் மீது கார்த்திக் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கிராம சமுதாயம், பொது மக்களிடம் ஆண்டுதோறும் கோவில் திருவிழாவிற்காக வரி வசூல் செய்யப்பட்ட நிலையில், முன்விரோதம் காரணமாக கார்த்திக் குடும்பத்தினரிடம் மட்டும் வரி வசூல் செய்யவில்லை. இது குறித்து கேட்டதற்கு தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், கார்த்திக் தந்தை, அண்ணன் மற்றும் குடும்பத்துடன் ஊர் மக்கள் எந்த வித பேச்சுவார்த்தையும் வைக்க கூடாது என்றும் குடிநீர் உள்ளிட்ட எதுவும் தரக்கூடாது என ஊர் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கார்த்திக் தனது குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனைக்கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இதனால் தேனி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:நீட் விலக்கு தீர்மானம்; கள்ளக்குறிச்சி விவகாரத்தை மடைமாற்ற திமுக நாடகம் - எடப்பாடி குற்றச்சாட்டு!