தேனி: தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தக்காளி, வெங்காயத்தின் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு தினசரி வரும் காய்கறி அளவைவிட குறைவாக வரத்து இருப்பதால் காய்கறிகள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
சமீப காலமாக விலை ஏற்றம் இல்லாமல் இருந்த காய்கறிகளின் விலை, தற்போது திடீரென உயரத் தொடங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இஞ்சி, வெங்காயம் ஆகிய அத்தியாவசிய காய்கறிகளின் விலையும் திடீரென உயர்ந்துள்ளது.
வெங்காயம் கிலோ 60 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரையும், இஞ்சி கிலோ 150 ரூபாயிலிருந்து 170 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது 100 ரூபாய் வரை விற்பனையாகிறது.
ஆனால் வெளி சந்தைகளில் தக்காளியின் தரத்திற்கு ஏற்ப ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதர காய்கறிகளின் விலையும் கிலோவிற்கு ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: செருப்பைக் கழற்றி சண்டை.. அரசுப் பேருந்தில் களேபரம்.. தேனியில் நடந்தது என்ன? - Theni To Trichy Bus Fight