சென்னை:பாதுகாப்பு, வன்முறை மற்றும் கலவரத்தை அடக்குதல், குற்றவாளிகளை சிறைக்கு அழைத்துச் செல்லுதல் உட்பட பல்வேறு பணிகளை ஏ.ஆர் எனப்படும் ஆயுதப்படை போலீஸார் செய்து வருகின்றனர். சென்னையை பொறுத்தவரையில் புதுப்பேட்டை மற்றும் பரங்கிமலை ஆகிய இரண்டு இடங்களில் ஆயுதப்படை இயங்கி வருகிறது.
இதில் சென்னை பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படையில் லிங்கேஸ்வரன் என்பவர் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தலைமையில் சென்னை புழல் உள்ளிட்ட சிறைகளிலிருந்து கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லும் பணியிலும், பின்பு நீதிமன்றங்களிலிருந்து சிறைக்கு அழைத்து செல்லும் பணிகளிலும் ஆயுதபடை காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கிண்டி அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம்: முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?
இந்த நிலையில் கைதிகளை அழைத்துச் செல்லும் காவல்துறை வாகனத்தில் அமர்ந்து கொண்டு சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன் காவல்துறை சீருடை கூட அணியாமல் மது அருந்துவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகின. காவல் வாகனத்திலேயே இதுபோன்ற நடந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் கைதிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு செல்போன் கொடுத்து உறவினர்களிடம் பேச சொல்வதும் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் வாட்ஸஅப் குழுவிலும் அந்த வீடியோ பரவி உள்ளது. இதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரனிடம் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் தற்போது லிங்கேஸ்வரன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.