சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நுழைவுவாயில் முன்பு, 100க்கும் மேற்பட்ட ரயில்வே பயிற்சி பெற்ற மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய ரயில்வேயில் 3.12 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளது.
இதில் தமிழ்நாட்டை உள்ளடக்கிய தெற்கு ரயில்வேயில் 22,227 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரியும், 2008ஆம் ஆண்டு முதல் ரயில்வே பயிற்சி பெற்ற தமிழ்நாடு அப்ரண்டீஸை வேலைக்கு எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில்வே துறையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதாகவும், அதேநேரம், வட மாநிலத்தவர்கள் தொடர்ந்து பணியமர்த்தப்படுவதாகவும் கோஷங்களை எழுப்பினர். அண்ணாமலையும், பாஜக அரசும் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் போராட்டத்தின்போது மாநில அரசின் மீது பழி சுமத்தியதாகவும், தற்போது இதற்கு எவ்வித பதிலும் அளிக்காமல் அலட்சியம் காட்டுவதாகக் கூறி தங்கள் ஆதார், பான் கார்டு உள்ளிட்டவற்றை எறிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால், இன்னும் அதிக அளவில் மாணவர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டமாக மாற்ற இருப்பதாக ரயில்வே பயிற்சி பெற்ற மாணவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சனாதன விவகாரம்: உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா தகுதி நீக்கத்திற்கு அவசியம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்!