கரூர்: கரூர் அரசு வேளாண்மை கல்லூரி துவங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில், கல்லூரிக்குத் தேவையான ஆய்வுக்கூடங்கள், பேராசிரியர்களின் எண்ணிக்கை, வேளாண்மை ஆய்வு நடத்த வேளாண் விளைநிலங்கள், மாணவர்கள் தங்கிப் பயில விடுதி வசதிகள் ஆகியவை ஏற்படுத்தி தராமல், அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பொறுப்பு அலுவலர் முனைவர் பாலசுப்பிரமணியன், நடைபெற்ற பெற்றோர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால் பெற்றோர் கல்லூரி பொறுப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, தன்னால் எதுவும் செய்ய முடியாது என அவர் கூறியதால், கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் மதியம் 2 மணி அளவில் அமர்ந்து, மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மாணவர்களின் போராட்டம் குறித்து அறிந்து வந்த கரூர் மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் ராஜா கனகராஜ், பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், தங்கள் கோரிக்கையை தமிழக அரசுதான் நிறைவேற்ற வேண்டும் என கல்லூரி மேற்பார்வை அலுவலர் கூறுவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல் ஆகியோர் கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் மற்றும் பெற்றோரை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் மாணவர்களின் முக்கிய கோரிக்கையான ஆய்வக வசதி, நூலக வசதி, போதிய பேராசிரியர்கள் நியமனம், வேளாண் கல்வியை போதிப்பதற்கு போதிய விவசாய நிலம் ஆகியவை குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் கலைந்து சென்றனர். கரூர் வேளாண்மை கல்லூரியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.