தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து வெளிப்படையான விசாரணை" - சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்! - NEET RESULT ISSUE

NEET RESULT ISSUE: நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி நடந்திருப்பதாக பலர் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் முழுமையான தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டு என தேசிய தேர்வு முகமைக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத்
டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் (Credit - ETVBharat TamilNadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 9, 2024, 8:00 AM IST

டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் செய்தியாளர் சந்திப்பு (Credit - ETVBharat TamilNadu)

சென்னை: நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து நேர்மையான வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் மற்றும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் மற்றும் மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இருவரும் சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத், "இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டதில் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் 14ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் நான்காம் தேதி முன்கூட்டியே வெளியிடப்பட்டது.

தேர்வில், முழுமையான மதிப்பெண்ணை 67 மாணவர்கள் பெற்றுள்ளனர். ஹரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏழு மாணவர்கள் முழுமையான 720 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதைப் போலவே சில இடங்களில் வினாத்தாள் கசிய விடப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவதில் ஆள் மாறாட்டமும் நடைபெற்றுள்ளது. இத்தகைய முறைகேடுகளின் காரணமாக நீட் தேர்வின் மீது கடுமையான அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

நீட் நுழைவுத் தேர்வில் நடைபெற்றுள்ள, இம் முறைகேடுகள் தொடர்பாக முழுமையான நேர்மையான வெளிப்படையான விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும். தவறு செய்த நபர்கள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கையை எடுத்திட வேண்டும். தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்கிட வேண்டும்.

அதற்காக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை ஒன்றிய அரசு பெற்று தர வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அதற்கு, தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் உடனடியாக திருத்தத்தை கொண்டு வரவேண்டும்.

நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் முழுமையான தரவரிசை பட்டியலையும்( Complete Rank List), வகுப்புவாரியான தரவரிசைப் பட்டியலையும்(community rank list),மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலையும்( state rank list )வெளிப்படை தன்மையுடன் ,தேசியத் தேர்வு முகமை வெளியிடவில்லை. தொடர்ந்து பல ஆண்டுகளாக, பலமுறை எங்கள் சங்கத்தால் வலியுறுத்தப்பட்டும் வெளிப்படத் தன்மையுடன்,இவ்வாறு தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிடுவதில்லை.

இது தேசிய தேர்வு முகமை மீது அவநம்பிக்கையையும், ஐயத்தையும் ஏற்படுத்துகிறது. தற்பொழுது தனியார் கல்லூரிகளில் ,நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களில் 100% இடங்களுக்கும் அந்தந்த தனியார் நிறுவனங்களே கல்வி கட்டணத்தை தொடர்ந்து நிர்ணயித்துக் கொண்டு வருகின்றன. இதற்கு ஒன்றிய அரசும் துணை போகிறது. இதன் மூலம் ஒன்றிய பாஜக அரசு தனியார் துறைக்கு ஆதரவாக இருக்கிறது.ஏழை எளிய மாணவர்களுக்கு எதிராக இருக்கிறது என்பது உறுதியாகிறது.

எனவே, ஒன்றிய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உடனடியாக,தனியார் மற்றும் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழங்களினுடைய 100 விழுக்காடு இடங்களுக்கும் கல்வி கட்டணத்தை நியாயமாக நிர்ணயிக்க வேண்டும்.கூடுதல் கட்டணங்களை வசூல் செய்யும் கல்லூரிகள் மற்றும் கோச்சிங் சென்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை மாநில மற்றும் ஒன்றிய அரசுகளே ஏற்க வேண்டும்.மாணவர்களுக்கு வட்டி இல்லாத கல்விக் கடனை தங்குதடையின்றி வழங்கிட வேண்டும்.

ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி,பொறியியல் கல்வி உள்ளிட்ட தொழில் கல்லூரிகளிலும்,உயர் கல்வி நிறுவனங்களிலும். கலை அறிவியல் கல்லூரிகளிலும் 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு.. தேர்வர்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன? - TNPSC GROUP 4 Exam

ABOUT THE AUTHOR

...view details