சென்னை: புதிய பேருந்துகள் வாங்க வேண்டும், முதிர்ந்த பேருந்துகளை நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் கடந்த மே 21ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு, முதிர்ந்த பேருந்துகளை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2011-2021 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலத்தில் அதிமுக அரசு 14,489 புதிய பேருந்துகளை, அதாவது சராசரியாக வருடத்திற்கு 1,449 பேருந்துகள் என அறிமுகப்படுத்தியது. இதற்கு முன்னதான, திமுக அரசு கடந்த 2006-2011ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலக்கட்டத்தில் 15,005 பேருந்துகள் என வருடத்திற்கு 3,001 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தியது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் புதிய பேருந்துகள் வாங்காத காரணத்தினால், வயது முதிர்ந்த பேருந்துகளின் எண்ணிக்கையும், அவற்றின் ஆயுட்காலமும் உயர்ந்துவிட்டதால், அவற்றை கழிவு செய்து படிப்படியாக புதிய பேருந்துகளை மாற்ற வேண்டி உள்ளது.
KFW என்ற ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் மூலம் 2,213 டீசல் மற்றும் 500 மின்சாரப் பேருந்துகள் வாங்குவது சம்பந்தப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு தகுந்த அறிவுரைகள் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்டு அதன் அடிப்படையில் பேருந்து கொள்முதல் செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது பேருந்துகள் கூண்டு கட்டுவதிலும், ஒப்பந்த நிலையிலும் உள்ளது.
முந்தைய அதிமுக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கடந்த 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டு காலத்தில் ரூ.23,494.74 கோடி என வருடத்திற்கு சராசரியாக ரூ.2,349.47 கோடி மட்டுமே வழங்கியது. திமுக அரசு 2021-24 ஆம் ஆண்டு வரை 4 ஆண்டு காலத்திற்கு ரூ.29,502.70 கோடி என வருடத்திற்கு சராசரியாக ரூ.7,375.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.
மேலும், கடந்த 2022-23, 2023-24 மற்றும் 2024-25 நிதி ஆண்டுகளில் இந்த அரசு புதிய பேருந்துகள் மற்றும் 6 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பேருந்துகளின் கூண்டுகள் புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்து 7,682 புதிய பேருந்துகள் மற்றும் 1000 மின்சாரப் பேருந்துகள் மொத்த செலவு ஒப்பந்த அடிப்படையில் என 8,682 புதிய பேருந்துகள், 1,500 பேருந்துகள் கூண்டு கட்டி புதுப்பிக்க எடுத்த நடவடிக்கையில், இதுவரை 791 புதிய பேருந்துகளும் மற்றும் 858 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளும் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.