நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் என்.முருகன். நேற்றிரவு (திங்கட்கிழமை) இவருக்கு சொந்தமான படகில் அப்பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, இந்திய எல்லைக்குட்பட்ட கோடியக்கரை அருகே உள்ள பகுதியில் இவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக திடீரென அதிவேகமாகப் படகில் வந்த கடற்கொள்ளையர்கள், மீனவர்களைக் கடுமையான ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் படகு உரிமையாளர் முருகனுக்குத் தலை மற்றும் கைகளில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் இருந்த தப்பிக்க கடலில் பாய்ந்த சக மீனவர்கள் காயமடைந்த முருகனை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரை பத்திரமாக மீட்டு செருதூர் கிராமத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர், அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஒரத்தூர் மருத்துவக் கல்லூரியில் முருகனை சிகிச்சைக்காகச் அனுமதித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, மீனவர்களின் படகிலிருந்த வலை, ஜி.பி.எஸ் கருவி, செல்போன், டார்ச் லைட் உள்ளிட்ட 2 லட்சத்திற்கும் மேல் மதிப்புடைய பொருட்களையும், கொள்ளையடித்துச் சென்றதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி, பொருட்களைப் பறித்துச் சென்ற சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ பாஸ் கட்டாயம் - உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! - Epass To Visit Ooty And Kodaikkanal