ராமநாதபுரம்:தமிழ்நாட்டு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது, எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர் கதையாகி வருகின்றன. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று (ஜூன் 22) தமிழக மீன்வளத்துறையினரிடம் உரிய அனுமதிச் சீட்டு பெற்று, மீன்பிடித் தொழிலுக்காக 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், மீனவர்கள் கடலுக்குள் சென்றுள்ளனர்.
இந்த சூழலில், இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, கச்சத்தீவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி மூன்று விசைப்படகுகள் மற்றும் அந்த படகுகளில் இருந்த 18 மீனவர்களை சிறை பிடித்ததாகத் தகவல்கள் வெளிவந்தன.
மேலும் அதன் தொடர்ச்சியாக, கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில், 18 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக, நடப்பாண்டில் சுமார் 178 இந்திய மீனவர்கள் மற்றும் 23 இந்திய படகுகளை சிறை பிடித்து நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக இலங்கை கடற்படை கடந்த ஏப்ரல் மாதம் தகவல் ஒன்றை வெளியிட்டது.