சென்னை:சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட மூன்று பேருந்து நிலையங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில், பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஏற்கனவே ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி 10 ஆம் தேதி (இன்று) முதல் 13 ஆம் தேதி வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,736 சிறப்புப் பேருந்துகள் என நான்கு நாட்களுக்கும் 14,104 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 4 நாட்களுக்கு 7,800 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 21,904 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிளுக்காக 15 ந் தேதி முதல் 19 ஆம் வரையில், தினசரி இயக்கக் கூடிய 10,460 பேருந்துகளுடன் 5,290 சிறப்புப் பேருந்துகளும் பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,926 என ஆக மொத்தம் 22,676 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சிராப்பள்ளி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகளும் இயக்கப்படும். அதுபோல, கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையத்திலிருந்து வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகளும் இயக்கப்படும்.
இதையும் படிங்க:பொங்கல் பண்டிக்கைக்கு கூடுதல் கட்டணமா? இந்த எண்ணில் புகார் கொடுக்கலாம்!
கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலைக்கும் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.