திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள்! திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அன்று இரவு பராசக்தி அம்மனின் பூப்பல்லக்கு விழா விமர்சையாக நடைபெறும். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் 7 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வார்கள்.
குறிப்பாக சித்ரா பௌர்ணமி, கார்த்திகை தீப பௌர்ணமி ஆகிய தினங்களில் திருவண்ணாமலையில் 15 லட்சத்திலிருந்து 40 லட்சத்துக்கு மேற்பட்ட உள்ளூர், வெளிமாவட்டம் மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய வெளிமாநில பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வார்கள்.
அந்த வகையில் நாளை அதிகாலை 4:17 மணி முதல் 24ஆம் தேதி அதிகாலை 5:47 மணி வரை சித்ரா பௌர்ணமி கிரிவலம் நடைபெற உள்ள நிலையில், சுமார் 25 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வார்கள் என மாவட்ட நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சித்ரா பௌர்ணமிக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதி, பக்தர்களுக்கு அன்னதானம், மருத்துவ முகாம், பாதுகாப்பு வசதிகள், பேருந்து மற்றும் ரயில் வசதிகள் ஆகியவற்றை மேற்கொள்வது பொருட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "வருகின்ற சித்ரா பௌர்ணமிக்காக இரண்டு டிஐஜி, 10 எஸ்பி உள்ளடக்கிய 5,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக 2,500 பேருந்துகள் 3,644 முறை வெளி மாவட்டங்களிலிருந்து இயக்கப்படும். அருகில் உள்ள மாவட்டங்களான வேலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்குப் பக்தர்கள் எளிதில் சென்று சேர உரியப் போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. கோயில் மற்றும் கிரிவலப் பாதையில் கண்காணிப்பு கேமரா அமைத்து தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திலும் தற்காலிக கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வசதிகள், கோயில் உள்ளே மூன்று மருத்துவ முகாம்கள், கிரிவலப் பாதையில் 85 மருத்துவ முகாம் ஆகியவற்றை அமைக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கோயில் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பக்தர்களுக்கு நீர்மோர் அளிக்க இரண்டு டேங்கர் லாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பேருந்துகள், வேன் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்காகத் தற்காலிக பார்க்கிங் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு பக்தர்கள் தங்களுடைய வாகனத்தை நிறுத்திக் கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நெல்லை கான்வென்ட் பள்ளியில் குழந்தைகளுக்கு சீட் வாங்க விடிய விடியக் காத்திருந்த பெற்றோர்கள்! - Tvl Convent School Admission